Skip to main content

வைஷ்ணவி

வியாழன் வந்தாலே, வைஷ்ணவி சாய்பாபாவிற்காக உண்ணாமல் விரதம் இருந்துக் கொண்டிருந்த நாட்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.எப்போழுதோ அவள் சிறுவயதில் விரதமிருந்து வேண்டிக் கொண்டது, வேண்டியவாறே நிகழ்ந்து விட்டதாம். அதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபாவிற்காக விரதமிருப்பதை நிரந்தர பழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். அதுவும் வேண்டுதல் இருக்கிறதோ இல்லையோ,வேண்டியது நிகழ்கிறதோ இல்லையோ விரதம் மட்டும் விடாப்பிடியாக நிகழ்ந்தேறியது. அதுவும் நீண்டகால வேண்டுதல் என்றால் விரதத்தின் தீவிரமும் வீரியமும் கூடிவிடும்.

ஆனால் அதெல்லாம் "இந்த கருப்புச் சட்டைக்காரனைக் கரம் பிடிக்கும் வரையில் தானே".

மனம் மறந்து, மௌனம் அணிந்து மழலையைப் போல் கண்ணயர்ந்து கொண்டிருக்கும் வைஷ்ணவியை அவளது தலைமுடியைக் கோதியவாறே புன்னகையை துளித்துளியாக உதிர்த்துக் கொண்டிருந்தான் முத்து.

காதலிக்கத் தொடங்கிய காலத்தில், விரதமிருப்பதைப் பற்றி ஏதாவது பேசத் தொடங்கினாலே "உன் பகுத்தறிவுப் போதனையெல்லாம் உன்னோட வச்சிக்க. நான் காதலிக்கிறவனான நீ கருப்புச் சட்டக்காரனா இருக்குறதால என்னுடைய இத்தன வருஷ நம்பிக்கையெல்லாம் ஒரு நிமிஷத்துல தூக்கிப் போட்டுட முடியாது. என்கிட்ட பேசுறதா இருந்தா உன் கருப்புச் சட்டைய கழட்டி வெச்சிட்டு பேசு. உன் பகுத்தறிவு உனக்குனா என் பக்தி எனக்கு" என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிடுவாள். அவன் பகுத்தறிவாதி. ஒவ்வொருமுறை அவள் விரதமிருக்கும் போதும், முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்து, "அது அவள் நம்பிக்கை.அதைக் குலைக்க வேண்டாம். ஒருநாள் அவளே புரிந்துக் கொண்டு வெளிப்படுவாள்" என்று விட்டுவிடுவான்.

ஆனால் அச்சமயங்களில் பசியில் வாடிக் கொண்டிருக்கும் அவளின் முகத்தைப் பார்த்தவன் வருந்தாமல் இருந்ததில்லை.

"அவளைக் கண்டிக்காமலும் விட்டதில்லை"

அன்று மாலை சங்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டுக் கிளம்பும் போது, "எனக்குச் சில புத்தகங்கள் வாங்க வேண்டும். புத்தகக் கடைக்குச் சென்றுவிட்டு போகலாமா...?" என்று வைஷ்ணவியிடம் கேட்டான் முத்து.

பெரிதாக விருப்பம் இல்லாவிட்டாலும் "சரி" என்று தலையசைத்தாள்.

மைதானத்தின் நடுவில் கருப்புச் சிலையாகக் கம்பீரமாக உயர்ந்து நின்றிருந்தார் பெரியார். அய்யாவின் சிலையையே அசராமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளைப் புத்தக நிலையத்திற்குள் அழைத்துச் சென்றான் முத்து. கடையின் முகப்பில் கருப்புச் சேலை உடுத்திக் கொண்டு நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்பெண்மணி அவர்களை புன்னகையுடன் வரவேற்றார்.

பெரியாரின் சிந்தனைகளும், கருத்துக்களும், உரைகளும், கட்டுரைத் தொகுப்புகளும் அரங்கம் முழுவதும் வியாபித்திருந்தன.

"பெண் ஏன் அடிமையானாள்.?... சுயமரியாதைத் திருமணம் ஏன்.?... சாதியை ஒழிக்க வேண்டும்... இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்" போன்ற புத்தகங்களை வைஷ்ணவியின் பார்வையில் படும்படி விரித்து வைத்து ஓரக்கண்ணில் வைஷ்ணவி தன்னைக் கவனிப்பதையும் உறுதிப்படுத்தி புத்தகத்தின் முகப்பு மற்றும் முன்னரை பக்கங்களில் பார்வைக் கதிர்களைச் செலுத்தியிருந்தான்.

அடுக்கில் இருந்த புத்தங்களைப் பார்த்தவாறே முத்து பார்க்கும், கையிலெடுத்து படிக்கும் புத்தகங்களையெல்லாம் நோட்டமிட்டிருந்தாள் வைஷ்ணவி.

அக்கா..! "பெரியார் அன்றும் இன்றும் என்றும்" புத்தகம் இருக்கா..? வைஷ்ணவியின் காதில் விழும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டான் முத்து.

அது நம்ம பதிப்பகம் இல்ல தம்பி. "விடியல்'காரங்க போட்ருக்காங்க"

"ஓ.. அதுல அய்யாவோட எல்லா தொகுப்பும் இருக்கா.?"

"அய்யாவோட கருத்துக்களயெல்லாம் ஒண்ணு சேத்தி ஒரு புத்தகத்துக்குள்ள அடக்கிட முடியாது தம்பி. அது சமுத்திரம். டம்ளர்குள்ள கடல நிரப்பிட முடியுமா என்ன?. அந்தப் புத்தகத்துல அய்யாவோட எல்லா சிந்தனைகளும், கருத்துகளும் உரைகளும் இருக்காது. ஆனா பெரும்பான்மையான முக்கியமான விஷயங்களெல்லாம் தொகுத்துப் போட்ருக்காங்க. கடந்த புத்தகக் கண்காட்சில கூட நல்ல வரவேற்புக் கிடைச்சிருக்கு"

"சரிங்க அக்கா..!"

வைஷ்ணவி கவனித்திருந்ததைப் பார்த்து உதவுகளில் வெளிப்பட்ட புன்சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பெண்மணிக்குப் பதில் அளித்தான்.

வாங்கியப் புத்தகங்களுக்குக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு மீண்டும் பெரியாரின் சிலையருகே சென்றான் முத்து.

மைதானத்தில் சிறுவர்கள் சிலம்பம் பயின்றுக் கொண்டிருப்பதை ரசிப்பது போல ஒருபுறம் ஒதுங்கினான் முத்து. அவள் தனித்து நின்றாள். முன் பக்கம் சென்று சிலையின் கீழே, "கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்று எழுதியிருப்பதைப் படித்தாள் வைஷ்ணவி. உடனே சுளித்துக் கொண்டாள். அவளின் முகம் கோபத்தில் கொதிப்பது போலிருந்தது. நெற்றியில் வகிட்டில் குவிந்திருந்தக் குங்குமம் அதை உறுதிச் செய்தது.

பெரியார் திடலில் இருந்துக் கிளம்பினர்.

"இவருக்கு நம்பிக்க இல்லனா வேற யாருக்கும் கடவுள் நம்பிக்க இருக்கக் கூடாதா.? "முட்டாள் அயோக்கியன் காட்டுமிராண்டி" இப்படியெல்லாமா ஒருத்தர் அதுவும் ஒரு தலைவர் மத்த மனுஷங்கள திட்றது. மொதல்ல இவருதான் காட்டுமிராண்டி" பெரியாரைப் பற்றி முத்துவிடம் பொரிந்துத் தள்ளினாள்.

"பெரியாரைப் புரிந்துக் கொள்ளுதல் என்பது அவரைக் கடுமையாகச் சாடுவதிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் தான் பிறக்கும்" என்பதால் அவன் வாயே திறக்கவில்லை.

அடுத்தநாள் வியாழக்கிழமை. வழக்கம் போல அதிகாலையிலேயே குளித்துவிட்டு விரதத்திற்குத் தயாரானாள். முத்து தூக்கம் கலைந்து விட்டாலும் மெத்தையில் வெறுமனே புரண்டுக் கொண்டிருந்தான்.

பெண் ஏன் அடிமையானாள்.? புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் சிறகடித்துக் கொண்டிருந்தன.. வைஷ்ணவி புத்தகத்தைக் கையில் எடுத்தாள். "அப்படி என்ன தான் அந்த மனுஷன் எழுதி இருக்காருன்னு பாத்துருவோம்" என்று மனதில் நினைத்துக் கொண்டே 'தான் புத்தகம் எடுப்பதை முத்து பார்க்கவில்லை என்பதை உறுதிச் செய்த பிறகு பக்கத்து அறைக்குச் சென்றாள்'.

புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாள். "கற்பு, விதவை மறுமணம், ஆண் ஆதிக்கம், பெண்ணிய ஒடுக்கம்" என்று அவள் வாசிக்க வாசிக்க இமைகள் இமைக்க மறந்து விரிந்தே இருந்தன. ஒரே வாசிப்பில் புத்தகத்தை முடித்தாள். பெரியாரின் மீதான "முதல் ஆச்சரியம்" அன்று ஏற்பட்டது.

"பெரியாரின் மீதான இவளின் வெறுப்பைச் சீண்டிவிட்டுதான் இவளிடம் அவரின் மீதான முதல் தேடுதலையும் அதன் மூலம் பகுத்தறிவு புரிதலையும் ஏற்படுத்த முடியும்" என்ற முத்துவின் எண்ணம் ஈடேறியது.

அடுத்த நாள்முதல் தினமும் முத்து அலுவலகம் சென்ற பிறகு, அவன் அலமாரியில் இருந்த பெரியாரின் மற்ற புத்தகங்களை அடுத்து அடுத்து வாசிக்கலானாள்.

மெல்ல மெல்ல பகுத்தறிவு எட்டி பார்த்தது. தொடர் வாசிப்பில் அது மேலும் வளர்ந்தது. விரதம் என்று யாருக்காகத் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கேன் என்று யோசிக்கலானாள். யதார்த்தைப் புரிந்துக் கொண்டாள். ஒரு கட்டத்தில் விரதம் இருப்பதையும், சாமிக் கும்பிடுவதையும் மறந்தே விட்டாள்.

வியாழக்கிழமை என்பதை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் வைஷ்ணவியைப் பார்த்து, அன்றுத் திட்டமிட்டே அவளைப் பெரியார் திடலுக்கு அழைத்துச் சென்றதையும், பெரியார் சிலையின் முன்பு வேண்டுமென்றே அவளைத் தனித்துவிட்டதையும்,பெண் ஏன் அடிமையானாள்.? புத்தகத்தை அவளின் கவனத்தை ஈர்க்கும்படி செய்ததையும் எண்ணி மீண்டுமொரு முறை உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் முத்து.

"வைஷ்ணவி எழுந்திரு...!! இன்னைக்கு வியாழக்கெழம...!! நம்மோட பகுத்தறிவு நாள்...!! பெரியார் திடலுக்குப் போய் அய்யாவ பாக்கணும்ல...!! சீக்கிரம் எழுந்திரு...!!" வைஷ்ணவியின் தோளில் தட்டினான் முத்து.

தூக்கம் கலைந்து எழுந்தாள்...! முகம் தெளிவாக இருந்தது...!

குளித்து முடித்து கருப்புச் சேலைக் கட்டிக் கொண்டு பெரியார் திடலுக்குச் செல்லத் தயாரானாள்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...