தொடர்ந்து தோற்கிறேன் கருணையே இல்லாமல் தோற்கடிக்கப்படுகிறேன் எனச் சொல்வது இன்னும் பொருத்தம் துளிர்க்கும் கண்ணீரை மறைத்துக் கொண்டு வலியறியாததாய் நடிக்கும் ரகசியங்களின் ஊற்றான அந்த மனத்தை இதுவரையில் அவதானிக்க முடிந்ததே இல்லை ஒவ்வொரு தோல்வியையும் வயிறார உண்டு புசிக்கும் வளர்ப்பு மிருகமது தொலைவோ அருகாமையோ தொடர் உரையாடலின் சிறு இடைவெளியில் நால்விழிகளும் மோதி வார்த்தைகள் மோனமாகும் தருணம் மௌனமே வெட்கும் அந்த மனமோ ஆழ்கடலைக் கடக்க முயலும் ஓடமெனச் சிறு புன்னகையோடு தவழ்ந்திடும் ஆசை ஆசையாய் ஓடிவந்து கன்னத்தில் அறையும் பிரிந்து போன தூரங்களை நிரப்பக் காற்றில் முத்தங்களைப் பறக்கவிடும் புதிரிலும் புதிரான அது விலகியதுமில்லை விரும்பி அணைத்ததுமில்லை தாயின் சேலைக்குள் ஒளிந்து தாயையே கண்டுபிடிக்கச் சொல்லும் மழலையிடம் ஜெயிப்பதில் என்ன இருக்கிறது பிரபஞ்சத்தின் பேரன்பால் தலையைக் கோதி வருடிடும் அதன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பரம சுகத்தைக் காட்டிலும் அவதானிக்க இயலாத அந்த மனம் தந்திடும் தோல்விகளில் பொதிந்திருக்கிறது என் ஜென்மத்துக்குமான அத்துணை தாகமும் உயிர்ப்பும்...