இதொன்றும் எனக்குப் புதிதல்ல இருப்பினும் இதயம் கனக்கிறது பன்னீர்த் தூவி வளர்த்தெடுத்த பாதங்களில் வழிந்திடும் குருதி மனதை இம்சிக்கிறது வளர்த்து அழகுப் பார்த்த முகங்கள் அழுகின்றன என்னைக் கண்டு அஞ்சுகின்றன எத்தனையோ பாதங்கள் என்னை மிதித்திருக்கின்றன வலியறிந்ததில்லை இந்தச் சுமக்காத பாதங்களின் வலியோ அமில வீச்சாய் நெஞ்சைப் பொசுக்குகின்றன விலகியோடும் கால்களை இருத்தி வைக்க எனக்குக் கரங்கள் இல்லை ஒருவேளை இருந்தாலும் அதற்குத் திராணி இல்லை ஏனெனில் பால் சுரக்காத மார்பில் மழலையின் பசி தீராது எனக்குத் தெரியும் வாழ்வாதாரமற்று அநாதரவாய் செல்லும் என் சொந்தங்களே காலத்தில் எல்லாம் சரியாகும் அன்று மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்பேன் ஈன்றெடுத்த குழந்தையை மார்பிலேந்தும் தாயைப் போல உங்களை ஏந்திக் கொள்வேன் மடியில் சாய்த்து புதுயுகம் காட்டுவேன் என்றென்றைக்குமான தளர்ந்திடா தன்னம்பிக்கையுடன் இப்படிக்கு சென்னை கார்த்திக் பிரகாசம்...