பக்குவமாயிருப்பதில்
உனக்கேதும் இழப்பிருக்காது
சந்தேகமில்லை
சமயங்களில்
எனக்குமே அது
வசதியாகத்தான் இருக்கிறது
மறுப்பதிற்கில்லை
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் குழந்தைத்தனம்
கொஞ்சம் குறும்பு
இல்லாத உன் பக்குவம்
நீர் கண்டிராத விளைநிலத்தின்
வெடிப்புகளாய் வீடெங்கும்
விரவியிருக்கிறது
அதைப் பார்ப்பதற்கோ
உன் பக்குவத்திற்கு
பார்வையில்லை
உன்
பக்குவச் சிரிப்பும்
பக்குவ ஆறுதலும்
பக்குவ அறிவுரையும்
பாசத்தைக் காட்டிலும்
பயத்தையே பயக்கின்றன
பிரச்சினையைப்
பேசும் முன்பே
விவாதம் வேண்டாமென
மன்னிப்புக் கேட்டுவிட்டு
கடந்துவிடுவாய்
என்னையும் வேறு
கடக்கச் சொல்வாய்
சமருக்கு முன்னே
சமாதானம்
யுத்தக்களத்திற்கு வேண்டுமானால்
சரியாக இருக்கலாம்
என்
மனதறியாமல்
நேரடியாக நீ
கேட்கும் மன்னிப்புகள்
மரண ஓலங்களை
ஒத்திருக்கின்றன
புண்பட்டு நிற்கும் மனதை
மயிலிறகால் வருடிக்
கொடுக்காமல்
பச்சை விறகால் விளாசும்
உன் பக்குவத்தை
கருகிய இதழ்களில் முத்தமிட்டு
மார்பற்ற நெஞ்சில் தான்
தினமும் அணைக்கிறேன்
பக்குவத்தைக் கழட்டி
ஒருநாள் மட்டும்
பரணில் போடு
மனதார சண்டையிடணும்
உன்னோடு
பதிலுக்கு நீயும்
கத்து
சண்டையிடு
முகத்தைத் தூக்கிக் கொண்டால்
சமாதானப்படுத்து
கொஞ்சிடு
சில பொய்களைச் சொல்லி
சிரிக்க வை
அப்போது
உன் தோளில் சாய்ந்து மன்னிப்புக் கேட்பேன்
என்னை மன்னி
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment