ஏன் இப்படி இருக்கிறேன்? விருது பெற்ற எழுத்தாளனின் கைகளைக் குலுக்கி வாழ்த்து சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் புன்முறுவலுக்கே தயங்குகிறேன் என்னவென்று அறிமுகப்படுத்திக் கொள்வது வாசகன் என்றா? ரசிகன் என்றா? நானும் எழுதுவேன் என்றா? 'நானும் எழுதுவேன்' இதைச் சொல்லத்தான் எத்தனை கூச்சம் சுயதம்பட்ட சுழிப்பில் எழுத்து கேலியாகச் சிரிப்பது போலொரு காட்சிப் பேழை அந்தக் கேலிச் சிரிப்பு சத்தமாக இன்னும் சத்தமாகக் கூனிக் குறுகித் தலை தாழ்ந்திடும் வரை தொடரும் அழ வைத்து அவமானத்தில் சாம்பலாக்கும் அகோரி சிரிப்பது தருணங்களில் தயக்கமின்றி செய்ய முடிந்ததெல்லாம் யோசிக்காமல் ஒதுங்கிக் கொள்வது மட்டுமே