Skip to main content

Posts

Showing posts from July, 2022
சட்டென ஓர் பறவையைப் போல வந்தமர்ந்தாள் கடும் புழுக்கத்தினால் மனிதத் தன்மையை இழந்தவள் போலிருந்தது அதுவரையில் அமைதியாக நின்றிருந்த மரம் நீண்ட யோசனைக்குப் பிறகு அதிதியை வரவேற்கும் இன்முக தலையசைப்புடன் காற்றைத் தருவித்து நிழலை விரித்து குளுமையைப் பரப்பி மடியில் சாய்த்துத் தாலாட்டி இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்தது மலர்களின் சங்கீதம் காற்றில் மிதக்க நினைவு திரும்பி நிகழுக்கு வந்தவள் வெடுக்கென ஒரு மலரைப் பறித்துவிட்டுப்  புன்னகை வழியும் முகத்துடன் கிளம்பிவிட்டாள்  மரத்தின் ஓலமும் மலர்களின் ஒப்பாரியும் அவள் செவிகளில்  விழுந்திருக்க வாய்ப்பில்லை
அப்பாவை போலவே இருக்கும்  அவருக்கு நரம்பியல்  கோளாறு கவலைப்படாதீர்கள் சிகரெட்டை நிறுத்தினால் காப்பாற்றிவிடலாம் நம்பிக்கையோடு இருங்கள் கடவுள் இருக்கிறான் என்கிறார் மருத்துவர் மருத்துவருக்கேயுரிய பொய்யான சக்கை சிரிப்பைச்  சிந்தியபடி  அப்பா சிகரெட் பிடித்ததில்லை நல்வினையாக அவருக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை
எல்லா பறவைகளுக்கும் ஒரே வானம் வானுக்கோ ஒன்றை போலில்லை  பறவைகள் இருப்பினும் தனக்கு மட்டுமே என நம்பும்  எந்தவொரு பறவையையும் துளியும் ஏமாற்றுவதில்லை  வானம்
யாருக்கும் தேவைப்படாதென பொது வெளியில் வீசியெறிந்த ஓர் அன்பு எங்கோ ஒரு குழந்தையின் சொப்பு சாமானங்களில் உயிர்ப்போடிருக்கிறது