Skip to main content

Posts

Showing posts from November, 2022

சிராய்ப்பு

மறுத்துப் பேசத்‌ தெரியாதவன் காலங்காலமாக அவர்கள் கேட்டதெல்லாம்  அவன் பேச நினைத்தது அல்ல ஆற்றின் நீரோட்டத்தில் உருண்டு புரண்டு  முனை மழுங்கிய கூழாங்கற்கள் அவை பத்திரமாகப்  புதைந்து கிடக்கும் அதன் கூரிய சிராய்ப்புகளின் மேலே தான் விடம் தடவிய கத்தியைச் செருகிப் புன்னகைக்கச் சொல்லி இறைஞ்சும் முகத்துடன் அன்பு பாராட்ட வருகிறார்கள் வழியும் புன்னகையில் வடியும் குருதியின் வீச்சத்தை அவர்கள் அறியப் போவதே இல்லை எனும் சுட்டெரிக்கும் நிதர்சனமே அவன் புண்ணில் செருகிய நிரந்தர வாள் 

சுலபமல்ல

மிகச் சாதாரணமாகக் கடக்கும்  அறிமுகமற்றவரின் மரணத்தைப் போல் சுலபமில்லை உறக்கமற்ற ஓர் இரவைக் கடப்பது

அதே குரல்

அப்பாவின் வயதிருக்கும் அவருக்கு "சார் சேர்வா கலக்கி" இலையில் வைத்தார் ஒடுங்கிய ஸ்தாயில் ஒலிக்கும்‌  அப்பாவின் அதே குரல்  சட்டென்று பேய் மழையில் ஒதுங்கச் சிறு கூடாரம் தேடி அலையும் தெரு நாயைப் போல்  அப்பாவின் நினைவுகளில் நொண்டியது மனம் வீட்டிற்குச் சென்றதும் உறங்கிக் கொண்டிருந்த மகனை இறுகக் கட்டிக் கொண்டேன் சிறிது ஆறுதலாக இருந்தது