மறுத்துப் பேசத் தெரியாதவன்
காலங்காலமாக
அவர்கள் கேட்டதெல்லாம்
அவன் பேச நினைத்தது அல்ல
ஆற்றின் நீரோட்டத்தில் உருண்டு புரண்டு
முனை மழுங்கிய
கூழாங்கற்கள்
அவை
பத்திரமாகப்
புதைந்து கிடக்கும்
அதன் கூரிய சிராய்ப்புகளின் மேலே தான்
விடம் தடவிய கத்தியைச் செருகிப்
புன்னகைக்கச் சொல்லி
இறைஞ்சும் முகத்துடன்
அன்பு பாராட்ட
வருகிறார்கள்
வழியும் புன்னகையில்
வடியும் குருதியின் வீச்சத்தை
அவர்கள் அறியப் போவதே இல்லை எனும்
சுட்டெரிக்கும் நிதர்சனமே
அவன் புண்ணில் செருகிய
நிரந்தர வாள்
Comments
Post a Comment