மனம் கவரும் நிறம் என்றேன் “நிறமல்ல. உறைந்து போன சாயம்” என்றது ஆளை மயக்கும் நறுமணம் என்றேன் “நறுமணமல்ல. உதிர்ந்து உரமான இலைகளின் வியர்வை” என்றது நீ மலர் தானே என்றேன் “ஆம். நீ பறிப்பதற்கு முந்தைய நொடி வரை” என்றது
லீதல் ஆற்றின் நீரைப் பருகிவிட்டேன் இன்னும் சில நிமிடங்களில் முழு மறதியுண்டாகும் இந்த வாழ்வை மறந்திடுவேன் எவ்வித சலனமுமின்றி உலகமும் என்னை மறக்கும் சந்தேகமில்லை மறதிக்குப் பழக்கிவிட்டால் இறப்பொன்றும் அத்துணை துயரமுமில்லை மறத்தலையும் இறத்தலையும் மயிலிறகால் பிணைத்து வைத்திருக்கும் உன்னைத் தான் முதலில் மறதிக்குப் பழக்குவேன் இறத்தல் என்னைப் பழக்கட்டும்