சென்னை வரை செல்லும் அடுத்த தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் தடம் 4ல் வந்து சேரும்.. முதன் முறை சென்னைக்கு கிளம்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவிப்பை கேட்கும் போது தன்னிச்சையாக ஒரு ஆனந்த சிலிர்ப்பு உண்டாகும்.. ரயில் வரும் திசையைப் பார்த்தால், தங்களின் எதிர் காலத்திற்கான விதை குழந்தை போல் தண்டவாளத்தில் தவிழ்ந்து வருவது போல் இருக்கும். அதில் பெரும்பாலனோர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நகரத்தில் வேலை பார்க்க, விதியால் சபிக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கும். "வேலைக்குப் போயி பணம் சம்பாதிக்க வேண்டும்..!!" என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 22 வருடங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுவிட்டு செல்கிறேன் என்று சொன்னால் "வானில் மிதந்து செல்லும் மேகங்கள் கூட ஒரு நிமிடம் நின்று தன் பங்கிற்கு சில கண்ணீர்த் துளிகளைத் சிந்திவிட்டு செல்லும்"".. அப்படி அப்பா, அம்மா, அப்பத்தா மற்றும் சகோதரியையெல்லாம் பிரிந்து கிளம்பும் இளைஞனுக்கு முதலில் ஆறுதல் சொல்லி அரவணைத்துக் கொள்ளும் முதல் ஜீவன்.. தன் கனவுகளையும் நினைவுகளையும் சுமையாக கொண்டு ஏறுபவனுக்கு தன்னம்ப...