குளிருக்கு இதமாக இருளாடையை இழுத்து போர்த்தியிருந்த ஆகாயம் வெளிச்ச கீறல்களை சோம்பலுடன் பிரசவித்த நேரம் தன் ஒளி நாணயங்களை சிதறடித்து கொண்டே பிறந்த குழந்தை போல் சிறியவனாய் கோபமற்றவனாய் அமைதியானவனாய் மேகங்களை திறந்து மெல்ல மெல்ல வெளியே வந்தான் சூரியன் பாடித் திரிந்த பறவைகள் பரதேசம் போயின மண்ணுக்குள் குழி பறித்து உறங்கி கொண்டிருந்த நண்டுகள் நடுக்கத்துடன் நடுநிசியில் விழித்த கோபத்தில் வெளியேறின காதலித்துக் கொண்டிருந்த காக்கைகளும் கரையை கவிதையில் நனைத்துக் கொண்டிருந்த காதலர்களும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர் அலைகள் தொட்டு நனைக்க பாதங்கள் இல்லாமல் அலைந்தன ஆனால் அவனின் வெளிச்ச கீறல்கள் இவை எதையும் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை மெல்ல மெல்ல மேலே வந்தான் ஆனந்தமாய் ஆடித் திரிந்த அலைகள் ஆசிரியரைக் கண்ட மாணவனை போல அடங்கி ஒடுங்கின வெளிச்சம் பட்டு வெட்கமடைந்த மணல்வெளியும் இப்பொழுது வேதனையில் வெப்பத்தை உமிழத் தொடங்கியது இருளில் இன்பமாய் இசைத்துக் கொண்டிருந்த கடற்கரை வெளிச்சத்தில் வெளிச்சத்தின் வெப்பத்தில் வெறிச்சோடி போனது...!!! கார்த்திக் பிரகாசம்...