நேர் வெயில் நெடுநெடுவென நெற்றியில் ஏறிக் கொண்டிருந்தது. மரம் துளிக்குக் கூட அசையவில்லை. அசலூரில் உத்யோகம் பார்க்கும் மகனின் வரவுக்காக காத்திருக்கும் பெத்தவளைப் போல காற்றை எதிர்பார்த்து மீளாத துயரத்தில் சரிந்திருந்தன கிளைகள். நிழலை விரிக்க அவற்றிடம் கொஞ்சமும் திராணியில்லை. நுதத்தைச் சுருக்கிக் கொண்டு - நடக்கும் தோரணையில் தெருவில் ஊர்ந்துச் செல்லும் மனித உருப்படிகளின் கண்களில் தழும்பியபடி - அலைகளற்ற கானல் கடலொன்று அவ்வப்போது தோன்றி மறைந்துக் கொண்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன்னர் பக்கத்துத் தேசத்துக்குப் பறந்துவிட்ட பறவைக் கூட்டம், பிறந்த மண்ணுக்கு இன்னமும் திரும்பியிருக்கவில்லை. "எங்கப் போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்" ஆளக் காணோம். 'பசிவேற வயித்தக் கிள்ளுது' மதிய சாப்பாட்டிற்கு வராத கணவனைத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தாள் அழகம்மா. "நேரங் கெட்ட நேரத்துல வந்து சாப்புட வேண்டியது அப்றம் சாப்பாடு சேரல ஜீரணம் ஆகலனு ஏப்பம் ஏப்பமா விட்டுக்கிட்டு ஏகத்துக்கும் என்னைய புடிச்சித் திட்ட வேண்டியது. இதே வேலையா போச்சு இந்த மனுசனுக்கு. எத்தனத் தடவ சொல்றது. கேட...