Skip to main content

Posts

Showing posts from February, 2020

ஈரம் உலர்ந்த தடம்

அழகான கையெழுத்து அவளுக்கு இடைமறிக்கா எளியச் சொற்களின் தொய்வில்லா நடையில் பார்க்கும் போதே காட்சிகளின்  பாவனையோடு கண்களில்  மிதக்கும் எழுத்துகள் படிவ வடிவக் கடிதத்தின் வலது இறுதியோரத்தில் ஈரம் உலர்ந்த தடத்தில் பெயர் எழுதி மூன்று புள்ளிகள் அழகான கையெழுத்தில்  துயரம் இன்னும் துயரமாக முற்றில்லா மூன்று புள்ளிகளுடன் அவளின் தற்கொலை கடிதம் காற்றிடம் காரணம் பேசுகிறது கார்த்திக் பிரகாசம்...

பட்டாம்பூச்சியின் மரணம்

வண்ண வண்ணமாய்ச் சிரித்து வானில் சிறகடித்த பட்டாம்பூச்சி பறக்க மறுத்து வண்ணம் மறந்து மடிந்துக் கிடக்கின்றது மூடிய கண்களில் வெளிச்சமில்லை வானத்தை அளந்துப் பார்த்த சிறகுகளில் அசைவில்லை பார்த்து பரவசமடைந்த முகங்களிலோ துளிக்கும் வருத்தமோ கண்ணீரோ இல்லாதது அந்தப் பட்டாம்பூச்சிக்குத் தெரிந்திருக்கும் எனக்கும் கூட வருத்தம் இல்லை பட்டாம்பூச்சியின் மரணத்திற்குப் பரிதபிக்கும் அளவிற்கு மனித மனமானது அவ்வளவு விஸ்தாரமாய் படைக்கப்பட்டதில்லை பட்டாம்பூச்சியும் அதை நன்கு அறிந்திருக்கக் கூடும் அதனால்தான் வாழும் வரை அனைவரையும் வசீகரித்த அதன் வண்ணங்களை மட்டும் இறந்தும் அது இழக்கவில்லை கண்ணீர்த் துளிகள் கிடைக்காத பட்டாம்பூச்சியின் மரணம் உணர்த்துவதெல்லாம் இறப்பின் வருத்தத்தில் இல்லை இருக்கும் வரையிலான இருத்தலின் மகிழ்ச்சியில் இருக்கிறது நமக்கான எல்லாமும் கார்த்திக் பிரகாசம்...

முழுமை

வேறு ஏதேதோவாய் இருந்தவனை நானாய் உணர்த்தியதில் இருக்கின்றது உன் இருப்பின் முழுமை கார்த்திக் பிரகாசம்...

குருதியில்

நீங்கள் வீசிய கூர்வாளின் முனையில் தோய்த்திட்ட மனிதவூன் ருசிக்கும் கூரியக் குருட்டுத்தனமான வார்த்தைகளுக்கான பதில் என் இதழ்களில் வழிந்திடும் குருதியில் கார்த்திக் பிரகாசம்...

கொலையாளி ஆகாதீர்

மூச்சுத் திணரும் ரோஜாவை சுருக்கு முடிச்சிட்ட நெகிழியிலிருந்து விடுவித்து மீண்டுமொரு முறை கொலையாளியாகும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் கார்த்திக் பிரகாசம்...