Skip to main content

Posts

Showing posts from June, 2022
காதுகள் அசையாமல் வாலது ஆடாமல் கண்ணது இமைக்காமல்  அலங்கரிக்கப்பட்ட அட்டை யானையொன்று கோவில் வாசலில்  வருபவர்களை வெறிக்கிறது  உள்ளிருக்கும் சிலையைப் போலவே ஜீவனற்று இருப்பினும் யானை அட்டையானதில் ஓர் ஆறுதல்  யாரிடமும்  பிச்சையெடுக்க வேண்டிய  அவசியமில்லை  எவரும்  அதை‌ வைத்து பிச்சையெடுக்கவும் வாய்ப்பில்லை
பைத்தியம்  பிடிப்பதற்குள் எதையாவது எழுதித் தொலை பைத்தியம் பிடித்த  பேனாவின் கடைசி எச்சரிக்கை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

ஆளில்லா விளையாட்டு மைதானத்தில் அவர் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் அமைதி சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப் பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடிக் கொண்டிருந்தன ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டுக் கொண்டார். வெளிச்சங்கள் நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றன. பார்வை மங்கிய மின்கம்ப விளக்கொன்று தலைகுனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். அவற்றின் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது. வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் தினக்கூலிகளைப் போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் கலையத் தொடங்கின மேகங்கள். யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் அவரும் நிலவும் தனியானார்கள். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கிறது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கிறது. சங்கிலித் தொடராய் நீளும் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு உற...
கல்யாண பந்தலில் எச்சில் இலைக்காகக்  காத்திருக்கும் பிச்சைக்காரனைப் போல உறக்கத்திற்கு ஏங்கித் தழுவும் இமைகளைப் பூட்டினால் வேலை முடிந்து வெறுங்கையுடன்  வீட்டிற்கு வரும் அப்பாவைப் போல உறக்கமற்று வந்த இரக்கமற்ற இருளாய் கவிழ்கிறது இரவு உறக்கம் இல்லா சாக்கிலோ சீராய் அடுக்கி வைத்த  நினைவடுக்கைக் கலைத்துப் போட்டு பிறாண்ட தொடங்குகிறது கூரிய நகங்கள் கொண்ட பூனை மனது இருள் ஓர் ஆசுவாசம் இரவு ஓர் நிம்மதி உறக்கம் ஓர் பெரும் ஆறுதல் முற்றுப் பெறாத இக்கவிதையைப் போலவே உறக்கத்தைக் களவாடிய இந்த இரவும் நீ...............ள்கிறது