குழந்தைகள் நிறைந்த கடற்கரை குழந்தையாகவே மாறிவிட்டது கடல் **** சமோசா சுண்டல் விற்பவனின் வறுமை பருவத்தை எல்லோருக்குமாக வாசிக்கிறது கடல் **** பல பாதங்கள் பதிந்த பின்னும் பழைய பாதங்களை மறப்பதில்லை கடல் **** ஊரை விட்டு ஓடி வந்தவனை வாழ்விற்கு அறிமுகப்படுத்துகிறது கடல் **** ஞாயிற்றுக் கிழமைகளில் உழைப்பாளர் சிலையை பொலிவுக்கூட்டி காட்டுகிறது கடல் **** கால் நனைக்காமல் போனவர்களின் வருகையைக் கணக்கில் வைப்பதில்லை கடல் **** கடலே கண்ணயர்ந்த பின்னும் உழைப்பாளர் சிலையின் முன் மாங்காய் கீற்றுகள் அரிந்து கெண்டிருக்கிறாள் பார்வை மங்கிய கிழவி