"சாப்பிட்ட கடன்" சிறுகதையில்,
சுமார் ஐம்பதினாயிரம் பெறுமதியுள்ள சொத்துக்கு இவன் அதிபதியானதும் தன் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்வதைக் கண்டான். முன்னால், 'என்னப்பா, கோமதிநாயகம்!' என்றுச் சொல்லித் தோளில் கைபோட்டுப் பேசியவர்கள், இப்போது அவனை முதலாளி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். வயது சென்ற கிழவர்கள் கூட ஏக வசனத்தில் பேசுவதை நிறுத்தி 'நீங்கள் நாங்கள்' என்று பேசினார்கள். வெற்றிலை பாக்கு கடைக்காரன் வலியக் கூப்பிட்டு ஓசி வெற்றிலைக் கொடுக்கத் தொடங்கினான். பலகார கடைக்காரனோ, இப்பொழுது கடனுக்குப் பலகாரம் கொடுப்பதுடன், கொடுத்த கடனைக் கேட்பதும் இல்லை. 'முதலாளி பணம் நம்ம பணம்; எந்த நேரத்தில் போய்க் கேட்டாலும் அட்டியில்லாமல் கிடைக்கும்' இன்று பெருமையோடு சொல்லிக் கொண்டான்.
கோமதி நாயகமும் தான் ஒரு முதலாளி என்ற நினைப்பை மனதுக்குள் பயிர்செய்து வளர்த்தான். அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளவும் ஆரம்பித்தான். முன்னாள் 'நீங்கள்' என்று யாரைப் பார்த்துச் சொல்லுவானோ அவர்களை இப்போது 'நீர்' என்றும் , 'நீர்' என்று சொன்னவர்களைப் பார்த்து 'நீ' என்றும் சொல்லத் தொடங்கினான்.
Comments
Post a Comment