உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை. அவர்களுக்கிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறையில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பது தியாகம்; விட்டுக் கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம். தண்டனை வழங்கலாம்.
சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய பண்பாட்டையும் நாகரிகத்தையும் சரியாக அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.
Comments
Post a Comment