மிஞ்சிப் போனால் அதிகபட்சமாக மூன்று தோசைகளைச் சாப்பிடலாம். அவ்வளவுக்கு தான் சட்னி இருந்தது. அது ஒரு அழகானத் தக்காளிச் சட்னி. சாப்பிட சாப்பிட நிறைந்தும் நிறையாமலும் வயிற்றைப் பார்த்துக் கொள்ளும் மாயாஜால சட்னி. நான்கைந்து தக்காளி பழங்களை நன்கு வதக்கி, தேங்காயைச் சில்லு சில்லுகளாகத் துருவி, மிளகாய் மற்றும் கல் உப்பை தூவி அம்மியில் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து எடுத்தால், வாசம் அதற்குள் வயிற்றின் வாசலில் நின்று பசியின் கதவைத் தட்ட துவங்கியிருக்கும். பின் ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்யில் ஐந்து கிராம் கடுகை மிதமான வெப்பத்தில் குளிக்க வைத்து அதை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டி கலக்கி முடிப்பதற்குள் மொத்தக் குடும்பமும் தட்டுடன் சாப்பிட தயாராயிருக்கும். அந்த அழகானத் தக்காளிச் சட்னிக்குத் திருஷ்டிக் கழிப்பது போல் ஆங்காங்கு எண்ணெயில் குளித்தக் கடுகுக் கூட்டம் மிதந்திருக்கும். ருசியைக் குறிக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாமல் "அழகு" எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். சாதாரணமான தொட்டுக் கொள்ளும் பதார்த்தமாக மட்டும் இருந்திருந்ததால் அதன் சுவையைப் பற்றிய விவ...