யாராவது என்னைப் பார்த்து "எந்தப் பள்ளியில் படிக்கிற" என்றுக் கேட்டால், "மாநகராட்சி நடுநிலைப் பள்ளி" என்றுச் சொல்லுவேன். பின்பு அவர்கள், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியா..? அது எங்க இருக்கு.. "லாரி மார்க்கெட்டுகிட்ட காந்தி செல இருக்குல்ல".. அங்க. "ஓ.. அந்த ஓட்ட பள்ளிக்கூடமா.. ஏன்டா ஓட்ட பள்ளிக்கூடத்துல படிக்கிறேன்னு சொல்லவேண்டியது தானா. அதவிட்டுட்டு மாநகராட்சியாம் நடுநிலை பள்ளியாம்" ஓட்ட பள்ளிக்கூடம். அப்படித்தான் ஊரில் எல்லோரும் சொல்வார்கள். செவ்வாய் பேட்டை ரோட்டில் நேராகப் போனால் நடுவில் ஒரு லாரி மார்கெட் வரும். லாரி மார்க்கெட்டிலிருந்து சாலை மூன்றாகப் பிரியும். அதில் எந்தப் பக்கத்தை நோக்கி நடப்பது போல் காந்தி கையில் தடியோடு நிற்கிறாரோ அந்தச் சாலையில் நடந்தால் நூறு மீட்டரில் இடதுபுறத்தில் அரசுப் பள்ளிக்கான அத்தனை அடையாளங்களோடும் எங்கள் பள்ளி இருக்கும். அப்பாவைத் திட்டியவாறே விண்ணப்ப படிவம் நிரப்பி, கட்டணமாக இருபத்தி ஐந்து ரூபாய் செலுத்தி அந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் அம்மா என்னைச் சேர்த்துவிட்டதை நினைவுக் கறைகள் இன்னும் ஞாபகம் வைத்துள்ளன. அப்...