அன்பான துணைவனுக்கு, 'அன்பான கணவனுக்கு' என்றுத் தெரியாமல் எழுதி அழித்துவிட்டேன். தெரியும். "கணவன்" என்றுச் சொன்னால் உனக்குப் பிடிக்காது. கணவன் என்ற சொல்லை ஒரு அடக்குமுறையை ஆணாதிக்கத்தைக் குறிக்கும் குறியீடாகவே நீ பார்க்கிறாய். "கணவன்" "மனைவி" என்ற அடக்கியும், பெருமையாக அடிமைப்பட்டும் கிடக்கும் பதவிகளில் தூய்மையான அன்பும் உண்மையுமில்லை. எனவே "துணைவன்" "துணைவி" என்பதே நமக்குப் பொருத்தமானச் சொற்கள் என்றுக் கூறுவாய். ஒருகணம் மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் பூரிக்கிறது. உத்தியோகம் நிமித்தமாக உன்னை பிரிந்து வந்து முப்பது நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால் இந்த முப்பது நாட்களை வருடக்கணக்காய் எண்ணிக் கடந்து வந்திருக்கிறோம் என்ற உண்மை என்னையும் உன்னையும் தவிர வேறாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விதிமுறைகளற்ற இவ்விளையாட்டினை இயற்கை இப்போது நம் வாழ்க்கை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. விளையாட்டில் பங்கேற்க முடியாமல் அசந்தர்ப்பமாக நீயும் நானும் வெறுமனே வேடிக்கைப் பார்க்கும்படி ஆகிவிட்டது. வானளவு தொழிற்நுட்பங்கள் வளர்ந்த...