Skip to main content

அன்பான துணைவனுக்கு

அன்பான துணைவனுக்கு,

'அன்பான கணவனுக்கு' என்றுத் தெரியாமல் எழுதி அழித்துவிட்டேன்.

தெரியும். "கணவன்" என்றுச் சொன்னால் உனக்குப் பிடிக்காது. கணவன் என்ற சொல்லை ஒரு அடக்குமுறையை ஆணாதிக்கத்தைக் குறிக்கும் குறியீடாகவே நீ பார்க்கிறாய்.

"கணவன்" "மனைவி" என்ற அடக்கியும், பெருமையாக அடிமைப்பட்டும் கிடக்கும் பதவிகளில் தூய்மையான அன்பும் உண்மையுமில்லை. எனவே "துணைவன்" "துணைவி" என்பதே நமக்குப் பொருத்தமானச் சொற்கள் என்றுக் கூறுவாய்.

ஒருகணம் மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் பூரிக்கிறது.

உத்தியோகம் நிமித்தமாக உன்னை பிரிந்து வந்து முப்பது நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால் இந்த முப்பது நாட்களை வருடக்கணக்காய் எண்ணிக் கடந்து வந்திருக்கிறோம் என்ற உண்மை என்னையும் உன்னையும் தவிர வேறாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விதிமுறைகளற்ற இவ்விளையாட்டினை இயற்கை இப்போது நம் வாழ்க்கை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. விளையாட்டில் பங்கேற்க முடியாமல் அசந்தர்ப்பமாக நீயும் நானும் வெறுமனே வேடிக்கைப் பார்க்கும்படி ஆகிவிட்டது.

வானளவு தொழிற்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. தொலைவில் இருந்தாலும் கைப்பேசியிலும், மடிக் கணினியிலும் தினமும் முகம் பார்த்துத் தான் பேசுக் கொள்கிறோம். இருந்தாலும் திரையில் முத்தமிட்டால் நெற்றியில் ஈரம் படிந்திடாதே. உள்ளங்கைகள் கோர்த்து உண்டான பிசுப்பிசுப்பை அலைபேசியில் அனுப்ப முடியாதே. மனதில் உணர்ச்சிகள் பெரும் மழைப் பிழம்பாய் பொழிகையில் அறிவுக் குடையால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை கண்ணா.

நான் உன்னை வந்துச் சேர இன்னும் சுமார் இருநூற்றுச் சொச்ச நாட்கள் மீதமிருக்கின்றன என்று சிந்தனையில் தோன்று போதே பெரும் ஆயாசமாக இருக்கின்றது. காலம் கருணையற்றது. நீ இல்லாத நேற்றும் இன்றும் எந்தவொரு வித்தியாசமுமின்றி வெறும் பொழுதுகளை மட்டும் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. பரவாயில்லை. அப்படியாவது உன்னைச் சந்திக்கப் போகும் அந்த நாள் வந்துச் சேரட்டுமே.

நீ அருகில் இல்லாத இந்நாட்களைப் புத்தகங்களோடு போக்கிக் கொண்டிருக்கிறேன். இப்போது தான் எனக்கொன்று புரிகிறது. நீயும் புத்தகமும் வேறு வேறு அல்ல. உன்னாலும் புத்தகங்களாலும் மட்டுமே தனிமைக்குள் தள்ளவும் - அதிலிருந்து மீட்கவும் என என்னை ஒருசேர இயக்க முடிகிறது.

சிந்தித்துப் பார்த்தால் நேசித்தலும் வாசித்தலும் ஒன்றே எனத் தோன்றுகிறது. தொடர் வாசிப்பே புரிதலுக்கும் பேரன்பிற்கும் அடிப்படையாகத் திகழ்கின்றது.

இங்கு இரவென்பது இருளாகவே இல்லை அன்பே. எங்கும் கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம். பொட்டுக்கும் இருட்டில்லை. நாமோ இருளை விரும்பும் இரவுலாவிகள். அதிலும் இருளில் இடமறியாமல் நீயிடும் முத்தங்கள் இனிமையானவை. இருளை அனுபவிக்க ஏக்கமாக இருக்கிறது.

உன்னை நினைவுபடுத்தும் விதமாக இங்கு ஒன்றுமேயில்லை. ஆதலால் போகும் இடங்களிலெல்லாம் உன் நினைவுக் கீற்றுகளைச் சிந்திக் கொண்டே செல்கிறேன்.

நான் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து நண்பர்கள் கேலிச் செய்கிறார்கள். பின்னே கணினிக் காலத்தில் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது. ஆனால் 'வருந்தாதே' என்று வாயில் சொல்லுவதற்கும், தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதலாய்த் தலையைக் கோதிவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா...

நமக்குள் இருக்கும் இந்தத் தொலைதூர இடைவெளியை, நாம் சந்திக்கப் போகும் அந்தவொரு நாளை ஆதர்சமாகக் கொண்டு நம்முடைய நினைவுக் குவியல்களால் நிறைத்துக் கொண்டிருக்கிறேன்.

சீக்கிரம் வந்துச் சேரட்டும் அந்த நாள்.

எப்போதும்
உன் துணையிவள்

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...