Skip to main content

Posts

Showing posts from March, 2021

வறண்ட வாசம்

என்ன விழைந்தாலும்  'எனக்கொரு கவிதை லாபம்' எனப் புட்டம் புதையப் புத்தகத்தை முறைத்தவாறு அமர்ந்துவிடுவாய் புசித்துப் போட்ட மாமிச துண்டாய் இழவு வாசம் புகையும் இருண்ட வீட்டில் இரவுக் கஞ்சிக்குக் காய்ந்த வயிற்றுடன் சுருண்டு கிடக்கும் எங்களைப் பற்றி உனக்கென்ன கவலை புருஷ ஜென்மமே பேனா மசி காகிதத்தை நிறைக்கும் வயிற்றை நிறைக்குமா வார்த்தைகளைப் புசித்தால் பசி தீர்ந்திடுமா எழுது இதையும் எழுதித் தள்ளு சிறந்த கவிஞன் பதக்கம் வாங்கி மார்பில் குத்திக் கொள் முலாம் பூசிய பதக்கத்தின் மறுபக்கம் வீசிடும் பார் காய்ந்த வயிற்றின் வறண்ட வாசம் கார்த்திக் பிரகாசம்...

விற்பனைக்கல்லாத

ஒரு சில கவிதைகளை எண்பது ரூபாய்க்கு விற்றேன் காய்ந்த வயிற்றைக் கவிதை விற்ற காசு காப்பாற்றியது விற்பனைக்கல்லாத ஒரு கவிதையை உடனடியாக எழுதிடப் போகிறேன் இப்போது கார்த்திக் பிரகாசம்...

வருமானம்

கம்மங்கூழ் மோர் விற்கும் வயதான பாட்டிக்கு வருமானம் என்பதெல்லாம் நரை கூச்செறிய தழுவும் கலப்படமற்ற மரத்தடி நிழல் காற்றும் வழிப்போக்கனின் கனிவான வார்த்தைகளுமே கார்த்திக் பிரகாசம்...

கோடாலி

சாதிய வேர்களில்  சாதிய பூவே  பூக்கும்  சாதிய வேர்கள்  சாதிய கனியையே  நல்கும் இலைகளில்  பச்சையத்திற்குப் பதில்  பரவியிருக்கும்  சாதியம் கிளைகளில்  சாதிய உண்ணிகளே     ஒட்டியிருக்கும் கோபம் கொண்ட  கோடாலி ஓங்கியது கொத்தி குடைந்தது தழுதழுத்த வேரின்  கடைசி பாகத்தில் கண்டது வேரில் இல்லை  நட்டு வைத்த கரத்தில்  இருந்திருக்கிறது  சாதி  கார்த்திக் பிரகாசம்...  

கண்ணீர்த் தடங்கள்

நேர் வெயில் நெடுநெடுவென நெற்றியில் ஏறிக் கொண்டிருந்தது. மரம் துளிக்குக் கூட அசையவில்லை. அசலூரில் உத்யோகம் பார்க்கும் மகனின் வரவுக்காகக் காத்திருக்கும் பெத்தவளைப் போலக் காற்றை எதிர்பார்த்து மீளாத துயரத்தில் சரிந்திருந்தன கிளைகள். நிழலை விரிக்க அவற்றிடம் கொஞ்சமும் திராணியில்லை. நுதத்தைச் சுருக்கிக் கொண்டு - நடக்கும் தோரணையில் தெருவில் ஊர்ந்து செல்லும் மனித உருப்படிகளின் கண்களில் தளும்பியபடி - அலைகளற்ற கானல் கடலொன்று அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன்னர் பக்கத்துத் தேசத்துக்குப் பறந்துவிட்ட பறவைக் கூட்டம், பிறந்த மண்ணுக்கு இன்னமும் திரும்பியிருக்கவில்லை. "எங்கப் போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்" ஆளக் காணோம். 'பசிவேற வயித்தக் கிள்ளுது' - மதிய சாப்பாட்டிற்கு வராத கணவனைத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தாள் அழகம்மா "நேரங் கெட்ட நேரத்துல வந்து சாப்புட வேண்டியது அப்றம் சாப்பாடு சேரல ஜீரணம் ஆகலனு ஏப்பம் ஏப்பமா விட்டுக்கிட்டு ஏகத்துக்கும் என்னைய புடிச்சித் திட்ட வேண்டியது. இதே வேலையா போச்சு இந்த மனுசனுக்கு. எத்தனத் தடவ சொல்றது. கேட்டா தான......

வளைந்த மூக்கு

வளைந்த மூக்கெனக்கு இயல்பில் வளைவு இல்லை நயவஞ்சகமாய் வளைக்கப்பட்டது கட்டியிருக்கும் நீள் கயிறு தொப்புள் கொடியில்லை கழுத்தை இறுகப் பிடித்திருக்கும் தூக்குக் கயிறு துளைக்கப்பட்டமென் புழுக்களின் மரண ஓலமும் இரைக்காக வேண்டி பின் இரையானவற்றின் இளஞ்சூட்டு இரத்தக் கறைகளும் என் மூக்கின் அடையாளங்கள் முனையில் பிடித்திருக்கும் இரும்புக் கரத்திற்கு நான் தூண்டில் செருகிய மென் புழுக்களுக்கு நான் துன்பன் மிதந்து வரும் மீன்களுக்கு நான் துரோகி எனக்கு நான் யாரோ கார்த்திக் பிரகாசம்...

இரண்டாம் முறை

விருப்பமின்றி வற்புறுத்தி வன்புணர்ந்தவனை மணக்க விருப்பமா எனக் கேட்கையில் இச்சமூகம் இரண்டாம் முறை அவளை வன்புணர்ந்திருந்தது கார்த்திக் பிரகாசம்...

தனிப்பெருந்துணை

முன்னாள் காதலர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் நானும் என்னவளும் அவளின் அந்நாள் காதலனுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது அந்நாளைய என் காதலிக்கு விரைவில் திருமணம் மாடு அசைபோடுவதைப் போல் சர்வ சாதாரணமாய் நிகழ்ந்தது அந்த உரையாடல் ஊற்றெடுத்த நினைவுகளின் நீட்சியைக் கண்களில் தவிர்க்க முடியவில்லை இருவராலுமே ஆரத் தழுவினோம் முத்தம் சுவைத்தோம் இறுகணைத்த சூட்டில் விட்டுச் சென்ற தத்தம் காதலர்களுக்கான நன்றி காற்றில் மிதந்தது கார்த்திக் பிரகாசம்...