அமிர்தம் தோற்கும் சொற்சுவையில் ஓலைக் குடிசையில் ஒழுகும் மழை நீராய் பலவித உணர்ச்சிகளும் சீரான பாங்கில் சொட்டச் சொட்ட உடல் நரம்புகளைக் கிளர்த்தி மனதை மிருக வேட்டையாடும் மெல்லிய கித்தார் கம்பியின் அதிர்வலை போல் கேட்ட மாத்திரத்தில் கண்ணீரைக் கீறும் உப்பு பரல் சொற்களைச் சேர்த்து உருக உருக ஓர் கதையைத் தயாரித்துவிட்டேன் கதை சொல்லும் முன்னேற்பாட்டின் தீவிர முனைப்பில் மற்றவர் கதையைக் கேட்கவில்லை அடுத்தது என் முறை வாசிக்கிறேன் சிற்சிறு முணுமுணுப்புகளின் பெருங்கூச்சலில் கூர் பார்வை முகங்களின் அனாதரவான கிழட்டுச் செவிகளில் மழையில் நனைந்த காகிதமாய் நசநசக்கிறது என் கதை