Skip to main content

Posts

Showing posts from January, 2024

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் - ராஜா சந்திரசேகர்

கணப்பொழுதில் இலகுவாக நடந்து முடிந்துவிடும் எத்தனையோ தருணங்களை ராஜா சந்திரசேகரின் கவிதைகள் ஆழமாகப் பேசுகின்றன. // சபிக்கப்பட்டவனின் கவிதையில் தேவனின் சொற்கள் இருந்தன "பிரான்சிஸ் கிருபா"வை நினைவுபடுத்தும் இந்த வரிகளை எளிதில் கடக்க முடியவில்லை. // வேறு வேறு அலைகளால் தன்னைத் திருத்திக் கொள்கிறது கடல் // பாறை நான் உடைபட அன்பின் பூவொன்றை மேல் வை // எல்லோரிடம் தப்பித்து வந்து என்னிடம் அகப்பட்டுக் கொண்டேன் // நம்பிக்கையின் மேல் அரும்பி இருந்த பனித்துளி உலரவே இல்லை // எழுதும் போது இடம் பெற்று திருத்தும் போதும் நீக்கப்பட்ட சொல் நான் // நாம் காதலைப் பற்றி பேசவே இல்லை நாம் பேசிய எல்லாவற்றிலும் அது இருந்தது // என்னைச் சேர்த்து கூட்டினாலும் பூஜ்யமே வருகிறது // என் பசி கூப்பிட்டு அவர் பசிக்கு ஏதாவது வாங்கித் தரச் சொன்னது // பெரு வனப் புல் நான் என்ற பெருமிதம் எனக்குண்டு - கார்த்திக் பிரகாசம்

மீராசாது - கே ஆர் மீரா - மொழிபெயர்ப்பு - மோ.செந்தில் குமார்

மீராசாது - கே ஆர் மீரா மொழிபெயர்ப்பு - மோ.செந்தில் குமார் வன்மம்.. பித்தேறிய காதலின் வன்மம். உதறித் தள்ளிய காதலை, அந்தக் காதலாலேயே வஞ்சித்துப் பலி தீர்க்கும் மிக நேர்த்தியான படைப்பு. நாவல் இப்படித் தொடங்குகிறது, "காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப் போகும், திரிந்து போகும், விஷமாகிவிடும். மாதவன், எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்குப் பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்" சொல்லப்போனால், கதையின் முடிவுமே இதுதான். வாசகனுக்குச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்திடும் வகையில் எந்தவொரு இடத்திலும் மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே எழாத அளவிற்கு, செறிவான மொழியில் செம்மையாக மொழியாக்கம் செய்திருக்கிறார் மோ.செந்தில் குமார். உண்மையைத் தெரிந்து கொள்ள, திரும்பிச் செல்லவே முடியாத தூரங்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.🖤
  நான்கைந்து பக்கங்களுக்குள் ஓர் வாழ்வியலைக் கடத்திவிடுகின்ற சிறுகதை வடிவத்தின் மீது வாசிக்கத் தொடங்கிய நாள் தொட்டே பெறும் ஆர்வமும், ஈர்ப்பும் எனக்குண்டு. அதிலும் இந்த வருடம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக மிக நல்ல நல்ல கதைகளை வாசிக்கக் கடவுகிறேன். கந்தர்வனின் “சனிப்பிணம்” மற்றும் “தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்” உதிரிகள் கலை இலக்கிய இதழில் வெளியாகியுள்ள நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய “குத்துக்கல்லு”, பாலைவன லாந்தரின் “இசை”, செளம்யா எழுதிய “மூளி” நா.கோகிலன் எழுதிய "கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது" ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்து ஒளிரும் மாணிக்கங்கள். ஒவ்வொரு கதையை பற்றியும் விரிவாக எழுத வேண்டும்.