Skip to main content

Posts

புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான்

உலகம் கண்டுகொள்ளாததையெல்லாம் ஒரு கவிஞன் உன்னிப்பாய் கவனிக்கிறான் உலகம் வெறுப்பதையெல்லாம் ஒரு கவிஞன் ஆழமாய் நேசிக்கிறான் உலகம் விரும்புவதையெல்லாம் ஒரு கவிஞன் வெகுவாய் வெறுக்கிறான் உலகம் சிறப்பற்றதென ஒதுக்குவதையெல்லாம் ஒரு கவிஞன் நினைவடுக்கில்  சீராய் அடுக்கி வைக்கிறான் உலகம் எத்தனையோ கவிஞர்களைப் புறந்தள்ளினாலும் புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான் கார்த்திக் பிரகாசம்...

மகிழ்ச்சியின் கண்கள்

'இன்று  நீ அழகாக இருக்கிறாய்' புன்னகை பூக்கிறாள் தோழி மறுத்தேன் முணுமுணுக்கிறாள் அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது மகிழ்ச்சியின் கண்களில் காண்பதெல்லாம் அழகென்று கார்த்திக் பிரகாசம்...

அம்மா கிடைத்தாள்

அம்மா இறந்தாள்  அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் போனது மகள் பிறந்தாள் அன்பு அரவணைப்போடு அம்மாவும் கிடைத்தாள் கார்த்திக் பிரகாசம்...

அழுகுரல்

தொடர்ந்து ஒலிக்கிறது  அந்த அழுகுரல் நேசிக்கவும் வெறுக்கவும் வைத்த அழுகுரல் குழந்தையின் சிணுங்கலாய்த் தொடங்கி அபலையின் அலறலாய் நீளும் அழுகுரல் விழிநீர் விசத்தில் தோய்த்தெடுத்த வாளை நேராய் தொண்டைக் குழியில் இறக்கும் அழுகுரல் கனவிலும் கேட்கும் உடலில்லாத அழுகுரலைப் பற்றிக் கொண்டு நானும் அழுகிறேன் அழுகுரல்களின் ஓலமாய் கனக்கிறது இரவு கார்த்திக் பிரகாசம்...

வாசனை

முன்னாள் காதலனின் திருமணத்திற்குப் பரபரப்புடன் தயாராகிறாள் தோழி அவனுக்குப் பிடித்த அரக்கு வண்ணத்தில் சேலையுடுத்தி நிலைக் கண்ணாடியே சோர்ந்திடுமளவிற்கு ஒவ்வொரு மடிப்பையும் சரிப்படுத்தி செந்தூர பொட்டு மையமாய் அதன் மேல் குங்கும கோட்டினை அளந்திழுத்து எத்தனையோ நாள் எங்கோ பரண் மேலிருந்த அட்டைப் பெட்டியை அவசர அவசரமாக உயிர்ப்பிக்கிறாள் சின்னதும் பெரியதுமாகப் பல பரிசுப் பொருட்கள் கடிகை கைக்குட்டை கால் கொலுசு அன்னா கரினீனா புத்தகம் ஆங்கில கவிதைகளால் நிரம்பிய காதலிச அட்டைகள் சுளுவில் சொல்லிவிட முடியாத மேலும் சில தூசாக கண்களை நெருடுகிறது கடந்த காலம் தூசியோடு காலத்தையும் சேர்த்து ஊதித் தள்ளுகிறாள் அறையெங்கும் பரவுகிறது அந்த பழைய காதலின் வாசனை கார்த்திக் பிரகாசம்...

ஒருமுறை காதலித்துவிட்டால் போதும்

கவலைக்கு  காலத்திற்கேற்ப பிரத்தியேக காரணம் இருக்கும் என்று கட்டாயமில்லை ஒருமுறை காதலித்துவிட்டால் போதும் கார்த்திக் பிரகாசம்...

முகமற்றவன்

சமயங்களில் என் முகம் நினைவில் நிற்காமல் போய் விடுகிறது ஏதேதோ முகங்களைப் பொருத்தினாலும் அது என் முகம் போலில்லை நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் நபர் என்னைத் தெரியவில்லை எனச் சொல்வாரென்று ஒவ்வொரு முறையும் ஊகிக்கிறேன் சொந்த கண்களுக்குப் பழகிடாத முகம் மூளையில் பதிய மறுக்கிறது சில வேளைகளில் கண்ணாடியில் தெரியும் முகம் என்னுடையதா என சந்தேக பிம்பம் மேல் எழும்புகிறது எல்லாவற்றிற்கும் மேலாகச் சிலர் என்னை உற்று நோக்கும் போது முற்றிலும் முகமற்றவனாகி விடுகிறேன் முகமற்றவனைத் தான் முகமன் கூறவில்லையென்று அவர்கள் குறையாடுகிறார்கள் கார்த்திக் பிரகாசம்...