Skip to main content

Posts

அமிர்தை

அந்த அழகான கனவு இப்படித்தான் இருந்தது வண்ண வண்ண பூக்களின் நடுவே தென்றலின் லயத்திற்கு சின்னஞ்சிறு சிறகுகளில் வயலின் மீட்டும் வண்ணத்துப்பூச்சியொன்று நங்கையவளின்  இதழ்களில் பதிந்தது மலரென நம்பி தேனினும் இனிய அமுதம் உண்ணக் கண்ட வண்ணத்துப்பூச்சி இவள் இதழ்களை விட மலரொன்றும் மெல்லியதல்ல என உச்சிக் கொட்ட நாணத்தில் உடலெங்கும் முளைத்தன இதழ்கள் அமிர்தையானாள் நங்கை

மறு சந்தர்ப்பம்

மறு சந்தர்ப்பம் வாய்த்தால் மாற்றிடலாம்  நடந்தததை தலைகீழாய் புரட்டிப் போட்டுவிடலாம் நிதானமிழந்த சுயத்தின் அநாதர  புலம்பலுக்கு வேடிக்கை பார்த்தே பழக்கப்பட்ட நிதர்சனமறிந்த மனத்தின்  வெற்று புன்னகை வாய்த்திட வாழ்வொன்றும் கசிந்த வினாத்தாள் அல்ல
கோடையில் ஓர் மழை நாளில் தான் முதல்முறை முத்தங்கள் பரிமாறிக் கொண்டோம் வானவில் தோன்றியதன்று கோடையில் பெய்யும் மழை அபூர்வமானது காதலின் சாட்சியைக் குறிப்பது குறைந்தபட்சம் எந்தன் காதலுக்கு
எந்தப் பக்கம் திரும்பினாலும் வாழ்வின் சுமைகள் சோதனைகள்  பற்றிய புலம்பல் பேச்சால்  நிரம்பிருக்கிறது  இன்று   பிறந்த குழந்தையோடு  புதிதாய் ஒரு உலகம் பிறந்திருக்கிறதே  அது யாருக்கும்  தெரியாதா?
சூல் விழிகளுக்குக் குடை பிடித்தது போல் அடர்த்தியான புருவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய்  சீராய் கலைந்த இழைகள் பூரணத்தின் உச்சம் கம்பிரமும் கூர்பார்வையும் தனித்த அடையாளமென பெண்ணானவர்கள் பேசிக் கொள்வர் தெளிவானவள் என்ன வேண்டும் என்றறிந்தவள் ஆதலால் என்னை வேண்டாம் என்றதில் வியப்பில்லை
பரபரப்பான சாலையின் மத்தியில் தத்தி தத்தி நடை பயிலும்  மழலையைப் போல் சாவகாசமாய் சென்ற பிண ஊர்தி ஊருக்கென ஒரு பொதுவான தகவலைத் தாங்கியிருந்தது இப்போதைக்கு  நீ செல்லலாம் இப்படிக்கு  உன் மரணம்
உயிரானவர்கள் உதறித் தள்ளிய நிராதவரான நிலையில் கண்ணீர் மல்க தலைவிரி கோலமாய் நிற்கும்  ஓர் இளம் பெண்ணை நினைவூட்டும் அந்த மரம் சவத்தைப் போல் அசையாமல் நிற்கும் அதன் அமைதி பெரும் அச்சமூட்டியது புல்லோ புத்தனோ எல்லோரும் வாழவென ஒரு காலம் உண்டு வசந்த காலம் வரும் இலை  காய்  கனி‌  பூ என யாவும் தோன்றும் அன்று  பருவத்தில் காதலனுடன் முதல் முத்தம் பதிந்த நாணத்துடன் காற்றை தருவிக்கும் இந்த மரம் அப்போது  பூத்துக் குலுங்கும் எண்ணற்ற மலர்களின் தேனை உறிஞ்சி என் காதலிக்கு ஓர் கவிதை வரைவேன்