“இரவு” என்ற சிறுகதையில்… “எனக்குள்ளேயே நான் நினைத்துக் கொண்டேன்! இரவு வந்ததும், உலகத்தின் தோற்றம் மறைய, நம்முடைய முகத்தையும் பார்க்க முடியாமல் போக, பக்குவம் அடையாத உள்ளமானது வெட்கம், மானம் முதலியவற்றை உதறி, தனிமையின் துணிவோடு கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான். மேலும் அந்த வெறியின் கிளர்ச்சியில், எந்தத் தடங்கல்களும் உண்டாகி நம் கருத்தையும் வெறிப்பாய்ச்சலையும் தடுப்பதில்லை. ஆகவே, மனிதன் கற்பித்துக் கொள்வதைத் தவிர இரவுக்கு என்று ஒரு தனித்தன்மையா இருக்கிறது?…” // இரவின் தனித்தன்மையைக் குறித்த நான்கைந்து நண்பர்களின் விவாதமே கதையின் சாராம்சம். அதில் ஒருவன், தன் நெருங்கிய நண்பனது மனைவியின் நிறம், உருவம் ஆகியவற்றை முதலில் அவலட்சணங்களாகப் பதிவு செய்கிறான். பிறகு அவளோடு தனியாக இருக்க நேர்ந்த ஓர் இரவின் இருளில் எப்படி அவளுடைய கோர சொரூபமும் , ஆபாசக் கருப்பும் எந்த தடங்கலும் செய்யாமல் அவனுடைய காம வேட்கை கிளர்ந்தெழச் செய்தன என்பதை விவரிக்கிறான். அதோடு மறுநாள் காலை வெளிச்சத்தில், “தற்போது நாம் இப்படி இந்தக் காக்காய் பூஞ்சி பெண்ணைப் பார்க்கவே அருவருப்புக் கொண்டு அவ...