நம் சமூகத்தில் மனிதாபிமானம்
குறைந்து வருவதற்கான அடையாளம் தான் முதியோர் இல்லங்களின் அதிகரிப்பு. பத்து மாதம்
கருவில் சுமந்து இருபது முப்பது வருடம் தோளில் சுமந்த பெற்றோருக்கு கடைசி
காலத்தில் கொடுக்கக்கூடிய பரிசு “முதியோர் இல்லம்” தானா..??
சமிபத்தில் நான்
சேலத்தில் இருந்து சென்னைக்கு இரயிலில் திரும்பிய போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி. 65
வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி நான் ஏறிய அதே பெட்டியில் ஏறினார். வெகு நேரம் மிக
அமைதியாகவே வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய கண்களில் இருந்து
கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. அருகில் இருந்தவர்கள் மௌனம் காக்க அந்த பாட்டியே தனது
நிலையை விளக்க ஆரம்பித்தார். தன் மகள் வீட்டிலிருந்த அவர் கூலி வேலைக்குச் செல்பவர்.
அந்த பணத்தையும் மகளிடம் தான் கொடுப்பார். கடைசி ஓரிரண்டு வாரமாக உடல்நிலை சரி இல்லாததால்
வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால் ஏசிய மகள் வார்த்தைகளை சகித்துக் கொண்டிருந்த
அவர் உச்சக்கட்டமாக அந்த மகள் அடிக்க கை ஓங்க மனம் தாங்காத தாய் உள்ளம் அந்த தள்ளாத
வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் அதுவும் கையில் வெறும் 100 ரூபாயை
வைத்துக் கொண்டு. இதை அவர் சொல்லி முடிக்கும் முன்பே அவருடைய கண்களில் கண்ணீர்
இன்னும் பெருக்கெடுத்தது. அந்த நொடியில் அந்த பாட்டியிடம் என்ன ஆறுதல் வார்த்தைகள்
சொல்வதென்று கூட தெரியவில்லை. எத்தனை ஆசை ஆசையாய் கனவுகளுடன் தன் மகளைப் பெற்று
வளர்த்து இருப்பார் அந்த பாட்டி. ஆனால் அந்த மகளோ தனது தாயையே சுமையாக
கருதிருக்கிறார். அந்த மகள் மனது தன்னை பெற்றெடுத்த தாய் மீது துளி அளவு பாசம் கூட
இல்லாமல் வறண்டுப் போய்க் கிடக்கிறது.
சென்னை சென்ட்ரல்
வந்தடைந்தோம். சென்னையில் என்ன செய்ய போகிறீர்கள் என்று விசாரித்தப் போது அந்த
பாட்டி கூறிய பதில் மிகவும் கவலை அளித்தது. ””நான் இங்கயே ஏதோ ஒரு வேலைப்
பார்த்துக் கொண்டு என்னுடைய கடைசி காலத்தை எங்கயாவது ஒரு முதியோர் இல்லத்தில்
போக்கிக் கொள்கிறேன்”” என்றார். என்ன செய்வதென்று தெரியாமல் நானும் என் நண்பனும்
கையில் இருந்த பணத்தை அந்த பாட்டியிடம் கொடுத்து விட்டு வந்தோம். அந்த கணத்தில்
என் மனதில் உரைத்தது ஒன்று தான். எனது தந்தையையோ தாயையோ அவர்களுடைய கடைசி
காலத்தில் இந்த நிலைக்கு ஆளாக்கக் கூடாது. அவர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கவில்லை
என்றாலும் கூட அவர்களுடைய நிம்மதியைக் கெடுக்க கூடாது.
தள்ளாத வயதிலும் தான்
பெற்ற மகனோ மகளோ கைவிட்ட நிலையிலும் கூட தமக்காக வேண்டிக் கொள்ளாமல் தனது மகன்
நன்றாக இருக்க வேண்டும் தான் பெற்ற மகள் சுகமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம்
வேண்டிக் கொள்ளும் அவர்கள் கடவுளை விட மேலானர்வர்கள். பெற்றோரை வீதியில் விட்டு
விட்டு அன்னையர் தினமோ முதியோர் தினமோ கொண்டாடுவது என்பது யாரோ பெற்ற வெற்றிக்கு நாம்
தங்கப்பதக்கம் பெறுவது போல். வெளியில் சந்தோசமாக இருக்கலாம் ஆனால் நம் மனசாட்சியே
நம்மை ஒரு நாள் கொன்று விடும்.
ஒவ்வொரு மகனும்
மகளும் தனது தாய் தந்தையரை முதல் குழந்தையாகக் கருத வேண்டும். கருவிலும் தோளிலும்
சுமந்த தாய் தந்தையை அவர்களுடைய கடைசி காலத்தில் கூட இருந்து கவனிப்பதை விட
வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். பெற்றோரை விட நம் மீது அக்கறைக் கொண்ட
வேறேவரனும் இருக்கின்றனரா என்ன. வயதான காலத்தில் அவர்களை முதியோர் இல்லத்திற்கு
அனுப்புவது உயிருடன் கல்லறைக்கு அனுப்புவதற்கு சமம்.
பிள்ளைகளால் கை
விடப்பட்ட முதியவர்களை அரவணைக்கும் “முதியோர் இல்லங்கள்” கோவில்களை விட சிறந்தவை.
அவற்றை பாரட்ட வெறும் வார்த்தைகள் போதாது. ஆனால் நாளுக்கு நாள் முதியோர்
இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பாராட்டக்குரியது
அல்ல. நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தமக்கு வாழ்க்கைக் கொடுத்த தாய்
தந்தையரை கூட கவனிக்க மனமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் சம்பாதிக்க போவது என்ன
இல்ல சாதிக்க போவதுதான் என்ன.? அப்படி சாதித்தால் கூட அதற்கு காரணம் யார்.! இதை
அனைவரும் ஒரு நிமிடம் யோசித்தால் நம் நாட்டில் முதியோர் இல்லங்களே இருக்காது.
நல்ல மனிதர்களை
பார்க்க பாசமற்ற விலங்குகள் செல்வது தான் “முதியோர் இல்லம்”. முதியோர் இல்லங்கள்
இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இளைஞர்களாகிய நாம் ஒன்றிணைவோம். அதற்காக நாம் பெரிதாக
ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நம் தாய் தந்தையை அவர்களுடைய கடைசி காலம் வரை
சந்தோசமாக பார்த்துக் கொண்டாலே போதுமானது.
கார்த்திக் பிரகாசம்..
Kavalpadatha machi varungalathula ellam kasta paduvanga ellorum illamaiyave iruka porathu illa.
ReplyDeleteVayasu anathan da theriyum ava ellam nallave irruka maatta.