சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் "தியாகராய நகரும்" ஒன்று. சொல்லப்போனால் சென்னையின் மிக முக்கியமான பகுதி. காலை முதல் இரவு வரை மனித தலைகளால் நிரப்பப்பட்டு இருக்கும். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தால் வரிசையாக தெரியும் மனித தலைகள் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை போல காட்சியளிக்கும். இன்னும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.அந்த இடத்தில் டீக்கடை வைத்திருப்பவன் கூட கோடிஸ்வரன் ஆகி விடுவான். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும். துணிக் கடை,நகைக் கடை என்று மக்கள் வெள்ளமாய்த் திரண்டு இருப்பர். நகைக் கடைக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் "இவனுக்கெல்லாம் மட்டும் எப்படி காசு கிடைக்குது" என்று பெருமூச்சு விட்டுவிட்டு செல்வான். மக்கள் அவர்கள் வாங்கும் பொருள்களின் கவர்கள், திண்பண்டங்களின் பேப்பர்கள்,கடையில் கொடுத்த விளம்பர பேப்பர்கள் மற்றும் வழியில் கொடுக்கப்பட்ட விளம்பர அட்டைகள் என அனைத்துக் குப்பைகளையும் அந்த இடத்திலேயே எரிந்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது ஏதும் தெரியாது...