வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைவதென்பதெல்லாம் பெருஞ்சிறப்பான விடயமல்ல. பொழுது விடிவது போல், இரவு மடிவது போல் அதுவும் இயற்கையான தற்செயல். யார் விரும்பினாலும், வேண்டாவிட்டாலும் அது நடந்தே தீரும். ஆனால் அந்த நண்பர்களே வாழ்க்கையாகிவிடுவது என்பது வேறு...! அது சென்னையில் வெயிலும் மழையும் ஒன்றாக மண்ணை முத்தமிடுவது போன்றதொரு அரிய செயல். எல்லாருக்கும் எளிதாக அமைந்துவிடாது. மீசைக் கூட முளைக்காத பள்ளிப் பருவத்தில் பூத்த நட்பு, பத்தாண்டுகளைக் கடந்தும் ஒரே பாதையில் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் இலக்கென்பது இறப்பாக மட்டும்தான் முடியும். யாருக்குத் தெரியும் அதன்பின் கூட தொடரலாம். நம் சந்ததியினர் நம் நட்பை வளர்த்தெடுக்கலாம். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். இதன்பின் சொந்தமாய் யார் வந்துச் சேர்ந்தாலும், யார் யாரோ விட்டு விலகினாலும் இந்த நட்பும் நண்பர்களும் இருக்கும்வரை இந்த வாழ்வை வஞ்சகமில்லாமல், எந்தக் குறையுமில்லாமல் கரையேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை மனமெங்கும் கானல் நீராய் அல்ல கடல் நீராய் நிரம்பி வழிகிறது. கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி. பிறப்பால் வந்த சொந்தங...