பரட்டைத் தலை
பிறந்த நிறத்தை மறந்திருந்த சட்டை
இடுப்பை இறுக்கமாக அணைத்திருந்த
கால்சராய்
காலணிகளைக் கண்டு
வெகுநாட்கள் ஆகியிருந்த
பாதங்கள்
முகம் பாவமாக இருக்கலாம்
அவனுக்கு பாவமே முகமாகியிருக்கும்
அந்தச் சிறுவனைக்
கடற்கரையில் காணலாம்
வணிக வளாகங்களின்
வாசலில் காணலாம்
பத்து ரூபாய் மதிக்கத்தக்க
ஏதோரு விளையாட்டுப் பொருளைக் கையில் வைத்திருப்பான்
வாங்கச் சொல்லி வற்புறுத்துவான்
மறுக்கையில் காலில் விழாத குறையாக
கெஞ்சுவான்
சாப்பிட்டு இரண்டு நாட்களென
அனுதாபம் ஏற்படுத்துவான்
படிக்க வைக்கட்டுமா என்றால்
பதறுவான்
பிச்சையெடுக்க அவன்
பிறக்கவில்லை
ஆனால் பிச்சையெடுக்க
கட்டாயமாக்கிக் கற்றுக்
கொடுக்கப்பட்டிருக்கிறது
என்றுத் தெளிவாகத்
தெரியும்
பிள்ளைகளைப்
பிச்சையெடுக்கப்
பெத்துக் கொண்டு
குப்பையைப் போல தெருவில்
வீசியெறிந்துவிட்டு
சென்றுவிட்டார்கள்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment