சென்னை வந்தது முதலான ஐந்து வருடக் காலத்தில் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறையை முழுமையாக அனுபவித்தது இந்தமுறை தான். ஆர்ப்பாட்டமில்லாத, கழுத்தை நெரிக்காத அமைதியான நாட்கள். மூன்று வேளை திருப்தியான உணவு, தின்றுத் தீர்க்க முடியாத திண்பண்டங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக முழு இரவு உறக்கம் மற்றும் பொழுதை மறக்கடித்த மதிய உறக்கம்.
ஆனால் வழக்கம்போல விடுமுறை நாட்களை யாரோ ஃபாஸ்ட் பார்வெடு செய்தது போன்றதொரு உணர்வு. ஐந்து நாட்கள் போன வேகமே புலப்படவில்லை
பண்டிகையென்றால் சிலருக்கு கொண்டாட்டம், சிலருக்கோ வீண் செலவு, சிலருக்கு சொந்த ஊருக்குச் செல்ல ஓர் காரணம்.
பண்டிகை மற்றும் விழாக் காலங்களின் மொத்த ஜீவனும் ஒளிந்திருப்பது என்னவோ குழந்தைகளிடமும், புதுமணத் தம்பதிகளிடமும் தான். அவர்கள் இல்லையென்றால் பண்டிகைகளும் வெறுமனே வந்துச் செல்லும் வார நாட்களைப் போலாகிவிடும்.
நண்பகல் வரை வெறுமனே இருந்த தீபாவளி நாள், தங்கை மருமகன் மாமா என மூவரும் வீட்டிற்கு வந்தவுடன் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.அவர்களின் இருப்பு தீபாவளியை ஒளிமயமாக்கியது.மருமகனின் சேட்டைகள் மாலைப் பொழுதை வண்ணமயமாக்கியது. அவர்கள் கொளுத்திப் போட்ட பட்டாசுகளில் உற்சாகம் உரக்க ஒலித்தது. அந்த உற்சாகம் வீட்டுச் சுவரின் ஒவ்வொரு பகுதியிலும் எதிரொலித்தது.
சுவர்களில் எதிரொலிக்கும் இந்த உற்சாசம்தான் அப்பா அம்மாவை சில காலங்கள் நிம்மதியாக உறங்க வைக்கப் போகிறதென்று எனக்கு நன்றாகத் தெரியும்.
ஐந்து நாட்களிலுமே ஓய்வில்லாமல் வேலைச் செய்து கொண்டிருந்த ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான். காலை உணவு முடிந்து நாங்கள் கைக் கழுவிக் கொண்டிருக்கும் வேளையில், அவள் சாப்பிடாமல் மதிய உணவிற்கு வேண்டியதை தயார் செய்து கொண்டிருக்கிறாள். மதிய உணவு முடிந்து நாங்கள் சற்று ஓய்வெடுக்க முற்படுகையில், அவள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது முடிந்தவரை சில வேலைகளை பகிர்ந்து கொண்டாலும் முழுமையாக முடியவில்லை. ஆதலால் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி துரத்திக் கொண்டே இருக்கிறது. அம்மாக்களுக்கு வேலை வைக்காத பண்டிகைகள் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
விடுமுறை முடிந்து வீட்டிலிருந்து கிளம்பியதும், "மீண்டும் அடுத்த விடுமுறை வரும் வரை இந்த நினைவுகளைக் கொண்டு தான் காலத்தை கடத்த வேண்டும்" என்று யாரோ காதில் சொன்னது போல் இருந்தது.
விழித்துப் பார்த்தால் "சென்னை அன்புடன் மீண்டும் வரவேற்றது"...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment