Skip to main content

குப்பை

குப்பைகள் வெளியே சிதறிக் கிடக்க, காலியாக இருந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால் அவன் ஒளிந்துக் கொண்டான்.

வீட்டு வாசலில் யாரோ இருவர் நின்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அசிங்கமான வார்த்தைகள். கேட்க முடியவில்லை. குரலை உற்றுக் கவனித்த போது எட்டு மாதத்திற்கு முன்பு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்த கேசவனும், செல்வராஜும் என்றுத் தெரிந்தது.

அவனுடைய மனைவி வாசற்படியில் படபடப்புடன் நின்றிந்தாள்.

"யம்மா.. மொதல்ல ஒம் புருஷன வெளிய வரச் சொல்லு" கேசவன் கத்தினான்.

"அவரு வீட்ல இல்லிங்க" உடைந்த குரலில் வார்த்தைகள் வந்தன.

"என்னம்மா.. எப்ப வந்துக் கேட்டாலும் இதையே சொல்ற... என்ன புருஷனும், பொண்டாட்டியுமா சேர்ந்துக்கிட்டு ட்ராமா பண்றீங்களா"

"இத பாரும்மா. வீட்டுக்குள்ள வந்து பண்ட பாத்திரத்தெல்லாம் தூக்கிட்டு போன அசிங்கமா போய்டுமேனு பாக்கறேன். ஒழுங்கு மரியாதையா அந்த நாதாரி பயல" பெரும்கோபம் கொண்டு வார்த்தைகளை விழுங்கினான் செல்வராஜ்.

அடுக்கு மாடி வீடுகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக கரண்ட் இல்லை போலிருக்கிறது. பாதி மறைந்தும் மறையாமலும் கரண்ட் இல்லா பொழுதைப் போக்க கிடைத்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட மனமின்றி அவரவர் வீட்டு வாசல்களில் அக்கம்பக்கத்தினர் சுவாரசிய முகத்துடன் வீற்றிருந்தனர்.

"புள்ளமேல சத்தியமா சொல்றேன். அவரு வீட்டுக்கு வந்து முழுசா மூணு மாசம் ஆச்சுங்க." அடுத்த வார்த்தை வருவதற்குள் அழுகை வந்துவிட்டது அவளுக்கு.

"உம் புருஷன வாங்குன காச ஒழுங்கா வட்டியோட கொடுக்கச் சொல்லு.. இல்லனா நடக்கறதே வேற" கேசவன் கடுகடுத்தான்.

"அவரு வீட்டுக்கே வரதில்லைங்க" கண்ணீரினால் வார்த்தைகளின் வேகம் தடைப்பட்டது அவளுக்கு.

"அப்போ புருஷன் இல்லாத வீட்ல இருந்துகிட்டு என்ன பண்ணப்போற.. அதுக்குப் பேசாம அவன் வாங்குன காசுக்கும் வட்டிக்குமா சேத்து என்கூட வந்து படுத்துட்டுப் போ. கடனாவது கழியும்" கோபத்தில் வார்த்தைகளை எறிந்தான் செல்வராஜ்.

பொத்தி வைத்திருந்த கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது அவளுக்கு. குனிந்த தலை நிமிராமல் அழுதுக் கொண்டே இருந்தாள். அவமானத்தில் நெஞ்சு படபடவென்று அடித்தது. முகம் முழுவதும் உதிராத வியர்வைத் துளிகள் வியாபித்திருந்தன. விரல்களை பின்னிப் பின்னி நீட்டி மடக்கினாள்.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தலை நிமிர்ந்தாள். முகம் ஏதோ தீர்மானத்திற்கு வந்துவிட்டதைப் போல் தெளிவுற்றிருந்தது.

"சரிங்க... படுக்குறேன்" பொட்டில் அறைந்தது போல தீர்க்கமாகச் சொன்னாள்.

நிராதரவான நிலையும், இயலாமையும் அவற்றிற்கும் மேலாக உச்ச டெசிபலில் உடலில் ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சி வேகமும் அவளேயே அறியாமல் அதைச் சொல்ல வைத்தன.

செல்வராஜ் அதிர்ந்து போனான். அவள் அந்த பதிலைக் கூறிய பிறகுதான் ஒரு பெண்ணைப் பார்த்து எவ்வளவு கேவலமான வார்த்தைகளைக் கூறியிருக்கிறோம் என்று உரைத்தது.

திரும்ப பேசாமல் கேசவனும், செல்வராஜும் குற்றவுணர்ச்சியில் நின்றிருந்தார்கள். அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே வெட்கமாக இருந்ததது.

சிறிது நேரத்திற்கு அந்த இடமே பேரமைதியில் மூழ்கியது போலிருந்தது.

அமைதியை செல்வராஜே உடைத்தான். ஒம் புருசன் வந்தானா நாங்க வந்தோம் கொடுத்த பணத்தக் கேட்டோம்னு சொல்லு. கேசவனும், செல்வராஜும் ஏதோ முணுமுணுத்தவாறே திரும்பி பார்க்காமல் வேட்டியை இறக்கிவிட்டுக் கொண்டு நடையைக் கட்டினர்.

அவள் அப்படியே வாசற் படியில் அமர்ந்துக் கொண்டாள்.

அதிர்ச்சியுடனும், அதே சமயம் பொழுதைப் போக்கிய திருப்தியுடனும் அக்கம்பக்கத்தினர் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தனர்.

கேசவனும், செல்வராஜும் போகும்வரை குப்பைத் தொட்டிக்கு வெளியே சிதறிக் கிடக்கும் குப்பைகளோடு அவனும் ஓர் குப்பையாக அங்கேயே ஒளிந்திருந்தான்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...