Skip to main content

Posts

Showing posts from September, 2020

புதிய நான்

பிறப்பதற்கு முன்பே  வாழ வேண்டிய மதத்தை வகுத்துவிட்டார்கள் பிறப்பதற்கு முன்பே வளர வேண்டிய சாதியை விதைத்து விட்டார்கள் பிறப்பதற்கு முன்பே படிக்க வேண்டிய படிப்பை புரிய வேண்டிய வேலையை முடிவு செய்துவிட்டார்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறேன் நான் கார்த்திக் பிரகாசம்...

அதே முகம்

ரசம் போன கண்ணாடியில்  ரசித்துப் பார்த்த முகம்  பளிங்கு கண்ணாடியில்  பளிச்சிடும் குறைகளோடு தெரிகிறது  கண்கள் கடத்திய கடைசி பொய்மையின் கண்கூடாய்  கார்த்திக் பிரகாசம்...

ஏதாவது பேசு

ஏதாவது பேசு..!  என்ன பேச..? ஏதாவது..! அதான் என்ன பேச...! அதெல்லாம் தெரியல ஆனா ஏதாவது பேசு..! சரி நீ பேசு...! என்ன பேச..? ஏதாவது பேசு..! உரையாடல்கள் தீர்ந்த ஓர் மாலைப் பொழுதின் உரையாடல்...! கார்த்திக் பிரகாசம்...

அன்புள்ள பாரதிக்கு

இந்தக் காலகட்டத்தில் நீ வாழ்ந்திருந்தால்... வாழ்ந்து... இறந்திருந்தால்... நீ இறப்பதற்கு முன்பே மரணச் செய்தியை முந்தித் தருவதற்கு உன் விட்டு வாசலில் ஈக்களுக்கும் இடமில்லா அளவிற்குத் தொலைக்காட்சி படமிகள் சூழ்ந்திருக்கும் படமி வெளிச்சம் படும் போதெல்லாம் உன் நண்பர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கண்ணைக் கசக்குவார்கள் விளம்பர இடைவெளியின்றி இருபத்தி நான்கு மணி நேரமும் உன் இறுதி நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கும் சொற்ப ஆண்டுகளிலே அற்ப ஆயுளில் இறந்தது ஓர் சகாப்தம் என புது கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் நீயே மறந்து போன உன் பழைய கவிதைகள் வாசிக்கப்பட்டிருக்கும் உன்னோடு பழகியவர்கள் தம் நினைவுகளைப் பகிர்ந்திருப்பார்கள் உன் முதல் கவிதை எது என்று விவாதம் நடந்திருக்கும் அமெரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்திருப்பார் எல்லோருடைய அலைபேசியின் கட்செவி அஞ்சலிலும் உன் படம் பகிரப்பட்டிருக்கும் நீயும் உன் இறப்பிற்கு இறுதி வழியனுப்புதலுக்கு ஆட்கள் கூடவில்லையென வருத்தமடைய வேண்டிய அவசியமிருந்திருக்காது என்ன செய்ய உனக்கு வாய்த்தது அவ்வளவு தான் கார்த்திக் பிரகாசம்...

ஒரே கனவு

அவள் உறங்கியதும் ஏற்கனவே திட்டமிட்டபடி அவளின் கனவிற்குள் சென்றேன் கனவிலும் நான் பார்த்திடாத உலகமாக அது இருந்தது அங்கு ஒரே ஒரு மனித உயிர் அது அவள் மட்டும் தான் பதுங்கு குழிக்குள்ளிருந்து பாம்புகளும் முதலைகளும் ராட்சத பல்லிகளும் துரத்துகின்றன முகங்களற்ற உடல்களற்ற வெறும் கரங்கள் அவளது உடலில் ஊற நீள்கின்றன கரப்பான் பூச்சியின் கண்கள் கத்திகளை வீசுகின்றன பெரும் ஓலத்துடன் விழுந்தடித்து ஓடுகிறாள் காப்பாற்ற பின்னாடியே நானும் ஓடுகிறேன் தடுமாறி விழுந்த குழிக்குள் ஐந்து தலைகளுடன் சிவப்பு எறும்புகள் பயத்தில் விழித்து வெளியேறிவிட்டேன் நடுக்கத்தில் உடல் வியர்த்து உள்ளாடைகள் நனைந்துவிட்டன இத்தனை கொடூர கனவிலும் பக்கத்தில் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் பெண்ணாய் இருப்பது கடினமென்றால் பெண்ணில் அவளாய் இருப்பது அதனிலும் கடினம் கார்த்திக் பிரகாசம்...

மூப்பு

இருளில் நெருங்கி வரும் பூனைக் குட்டியின் மிரட்சியான கண்களைப் போல் பயமுறுத்துகிறது மூப்பு மூப்பின் சாயலில் மரணம் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் மெல்ல மெல்லப் படருகிறது உடலும் மனதும் ஒன்றாக அதிர்வுறுகிறது சுமந்த பிள்ளைகளுக்குச் சுமையாகிறது உடல் மக்கிப் போன நினைவுகளின் நிரந்தர குப்பைத் தொட்டியாகிறது மனது கேட்க நினைத்த இசை இழவு வீட்டின் ஒப்பாரியாய் ஒலிக்கிறது புரியாத வார்த்தைகளை விடப் புரிந்த மௌனம் போதுமானதாக இருக்கிறது எறும்பின் நகர்வும் ஈக்களின் மொய்ப்பும் கவனத்தில் பதிகிறது மகனும் மகளும் நான் பார்க்க மறுத்த இளம் பருவத்தின் பிம்பங்களாய் இருக்கிறார்கள் பேத்தியும் பேரனும் நான் கவனிக்க மறந்த உலகத்தின் பிரதிகளாய் வளர்கிறார்கள் மிகச் சிக்கலான எளிமையாய் நீள்கிறது தலைமுறை இடைவெளி இறுக்கமும் வெறுமையும் இனியா நண்பர்களாகிவிட்டன பயணத்திலிருந்து என்னை இறக்கிவிட முற்படுகிறது வாழ்க்கை முடிவெடுப்பதற்குள் முடிந்துவிட்டது பயணம் எல்லாமும் என்னைவிட்டு விலகுகிறது ஒருகட்டத்தில் நானும் என்னைவிட்டு விலகிவிடுவேன் கார்த்திக் பிரகாசம்...

முற்றுப் பெறாத ஓவியம்

கண்கள் இரண்டும் ஒன்று போல் இல்லை புருவங்கள் கம்பளி புழுவைப் போல் இதழிலும் கூட விரிந்திருந்தும் புன்னகை மொட்டுகள் இல்லை எந்தக் கோணத்திலும் முற்றுப் பெறாத முகம் இருப்பினும் பெரும் ஆறுதல் பொய்யைத் தீட்டி துரோகம் திரட்டவில்லை தூரிகை கார்த்திக் பிரகாசம்...

இரவு

கண்ணீரில் நனையாத  இரவைத் தாருங்கள் உங்களுக்கு ஓர்  மழைக்காலத்தைப் பரிசாகக் கொடுக்கிறேன்  கார்த்திக் பிரகாசம்...

நம்பிக்கையின் துளிர்

காத்திருப்பின் களைப்பே காலமாய் வியர்க்கிறது தேடுதலின் சுகமே தொலைவாய் நீள்கிறது வீண் அச்சமே விதியாய் மொய்க்கிறது வேதனையின் மிச்சமே விழிகளில் வழிகிறது இருத்தலின் பயமே இல்லாமல் ஆக்குகிறது நம்பிக்கையின் துளிரே நாட்களை நகர்த்துகிறது கார்த்திக் பிரகாசம்...