Skip to main content

Posts

Showing posts from February, 2021

புழுக்கம்

சட்டையற்ற வெற்றுடம்பு வெளிச்சத்தை உண்ணும் பின்பனிக்கால பேரிருள் பேச்சரவமற்ற அமைதி புழுக்கம் தேடும் தனிமை ஏதுமற்ற ஏதேதோ சிந்தனை புறவுலகைப் புறக்கணித்து திசையறியா தொலைவில் எங்கெங்கோ திரியும் ஓரிடத்தில் நிற்காத மனம் கலங்குவதை உணர்ந்திடாத கண்கள் துடைத்திட எழுந்திடாத கரங்கள் மனவெளி அலைச்சலில் மறுத்துப் போன ஆத்மாவின் சோக கீதம் தான் இப்பொழுதில் யாவும் கார்த்திக் பிரகாசம்...

நீட்சி

காதலை எனக்குப் பழக்கியவனுக்குப் புத்தனின் சாயல் நானோ யசோதரையின் நீட்சி கார்த்திக் பிரகாசம்...

பூட்டியே கிடக்கின்றன

கழிப்பறையின் வாசல் முக்கில் ஆடம்பர அலுவலக கட்டிடங்களுக்குப் புறமுதுகைக் காட்டி திறந்தவெளியில் மலம் கழிக்கிறாள் சிறுமி வெயில் கொண்டு பூசுகிறது நகரம் முழுதும் நரகலின் நிறம் கட்டணமில்லா கழிப்பறையின் பூட்டுகளைத் திறப்பதற்குச் சாவிகள் இன்னும் உருக்கொள்ளவில்லை கார்த்திக் பிரகாசம்...

களவாடிய யோனிகள்

வயதாகிவிட்டது மணந்து கொள் என்கிறாள் அம்மாச்சி கனவில் களவாடிய யோனிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ஆயிரத்திற்கு மேல் ஊர் மலை தாண்டி பார்க்கப் போன பெண்ணிற்குக் கனவில் களவாடிய முள் மயிர்கள் நீட்டியவாறிருக்கும் யோனியின் உருவம் ரயிலேறி பார்க்கப் போன பெண்ணிற்கு மிருதுவான மயிர்கள் உடைய யோனியின் உருவம் பக்கத்துத் தெருவில் பார்த்த பெண்ணிற்கு மயிர்களற்ற மொட்டையான யோனியின் உருவம் பார்க்கும் பெண்களெல்லாம் யோனிகளாக மட்டுமே தெரிகிறார்கள் அடுத்தமுறை பெண் பார்க்கச் செல்லும் போது குறியை அறுத்தெறிந்துவிட்டுச் செல்ல வேண்டும் கார்த்திக் பிரகாசம்...

கூடுதல்

சோகத்தை மறைப்பது கூடுதல் உற்சாகத்தில் இருப்பது போல் நடிப்பதுவே கார்த்திக் பிரகாசம்...

ரணமின்றி

எப்போதோ உண்டான காயத்தின் குருதி ரணமின்றி கசிகிறது இப்போது பால்ய காலத்தின் பழைய நினைவுகளுக்குள் சத்தமின்றி என் பெயர்ச் சொல்லித் திரும்பினாயா நீ கார்த்திக் பிரகாசம்...

கிழம்

'மனதளவில்  நீயொரு கிழவன்' தோழி கடிகிறாள்  சிந்தையின் போக்கிடம்  மூப்பின் முகாந்தரம் அறிந்தவனின் மனம் கிழமாகத் தான்  இருக்கும் என்றேன் சாயம் பூசிய  நரை மயிராய் ஒதுக்கிவிட்டாள் அவள்   கார்த்திக் பிரகாசம்...

சென்னைவாசிகள்

நான் சேலம் மேல்வீட்டுக்காரர் பரமக்குடி கீழ்வீட்டுக்காரர் கடலூர் காய்கறி கடைக்காரர் நாகர்கோவில் மளிகைக் கடைக்காரர் திசையன் விளை டீக்கடைக்காரர் பாலக்காடு பழக்கடைக்காரர் செஞ்சி தண்ணீர்க்கேன் போடுபவர் ஈரோடு சைக்கிள் கடைக்காரர் அறந்தாங்கி இரைக்காய் அடைக்கலம் நாடிவந்து திரும்பும் பாதை நினைவிருந்தும் பயணம் சாத்தியப்படாத நாங்களெல்லாம் சென்னைவாசிகள் என்று வெளியில் பெருமையாகச் சொல்லிக் கொள்வோம் கார்த்திக் பிரகாசம்...

களம்

களத்தில் நிற்பவனின்  வாழ்க்கை பதக்கத்தில் முடிகிறது நிலத்தில் நிற்பவனின் வாழ்க்கை பஞ்சத்தில் முடிகிறது கார்த்திக் பிரகாசம்...