Skip to main content

Posts

Showing posts from October, 2021

சபிக்கப்பட்ட இரவுகள்

மை பூசிய இருள் உண்டு வடிவான வானம் உண்டு மின்னிடும் நட்சத்திரங்கள் உண்டு நிலவு உண்டு நிலவின் குளிர்தலும் உண்டு உறக்கம் மட்டும் இல்லை சபிக்கப்பட்ட என் இரவுகளில் கார்த்திக் பிரகாசம்...

அன்பு

ஒருமுறை ஏற்றுக் கொண்டால்   போதுமானது  காலந்தோறும் நிராகரிக்க கார்த்திக் பிரகாசம்...

சப்தமில்லாமல்

சுவாரசியம் நீர்த்துப் போய் சூழ்வதெல்லாம் சூன்யமாய் தெரிந்திடும் தீவிர மனமூப்பின் திட்டமிடாத நாட்களில் சப்தமில்லாமல் நிகழ்ந்தேறும் அழகிய தருணங்கள் அக்கணமே கவிதையாகி விடுகின்றன  அழுந்த பற்றிய வலிகளின்  உரசுதலில் கார்த்திக் பிரகாசம்... 

ஓரிரு துளிகளில்

அந்த ஓரிரு துளிகளில் தான் எல்லாம் மாறுகின்றது இலக்கியம் விரும்பி இன்ஜினியரிங்கில் வீழ்வதும் கனத்த மனதோடு காதலனை / காதலியை உதறுவதும் கனவுகளை மூட்டை கட்டியொழித்து மனமே இல்லாமல் மணப்பதும் மாத சம்பள வேலை மன்னனுக்கும் வாய்க்காதென்ற அங்கலாய்ப்பில் மனம் கசக்க தோய்வதும் இல்லாத இன்பத்தைச் சுகிக்காத நிம்மதியை வலிந்து முகத்தில் திணித்துக் கொள்வதுமென தனக்கான பிரபஞ்சத்தின் அஸ்திவாரம் ஒவ்வொரு முறையும் இடம் பெயர்கின்றது பெற்றவர்களின் அந்த ஓரிரு கண்ணீர்த் துளிகளைக் காணச் சகிக்காமல் கார்த்திக் பிரகாசம்...

பகடையாகாதவரையில்

விதிமுறைகளற்ற ஓர்  விளையாட்டினை இயற்கையின் பேரில் நம் எல்லைக்குட்பட்ட வாழ்க்கை மைதானத்தில் விறுவிறுவென விளையாடிக் கொண்டிருக்கிறது காலம் விளையாட்டில் பங்கேற்க முடியாமல் அசந்தர்ப்பமாக நீயும் நானும் வெறுமனே வேடிக்கை பார்க்கிறோம் ஒருவருக்கொருவர் பகடையாகாதவரையில் விபரீதமில்லை கார்த்திக் பிரகாசம்...

மயானத் தெரு

எந்நேரமும் மலர் மணம் வீசிடும் தெருவில் நாங்கள் குடியிருந்தோம் சுகந்தமான தென்றலுடன் எங்கள் வீட்டு வாசல் ஈரமாய் நனைந்தே இருக்கும் அறிமுகமில்லாத அந்நியர்களே அதிகம் உலா வருவார்கள் தாரை தப்பு முழங்கச் சில்வண்டுகளாகிய எங்களுக்கு ஒரே கும்மாளமாய் இருக்கும் அடிக்கு ஏற்ப ஆட்டம் போடுவோம் பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள் கோலிக் குண்டு ஆட்டத்தில் ஓர் நாள் நண்பனின் குண்டை உடைக்க கோபத்தில் திட்டினான் 'போடா.. மயானத் தெரு மயிராண்டி' அழுது கொண்டே ஓடினேன் மலரின் மணம் சகிக்கவியலா இழவு வீட்டின் நெடியாய் நீண்டு படுத்திருந்தது தெருவில் சுடுகாட்டுக் கரையின் ஒப்பாரி கூச்சலில் கூரை முக்காட்டுக்குள் முதுகின்றி முடங்கியிருந்தது எங்கள் வீடு கார்த்திக் பிரகாசம்...

வலசை

இறந்த காலத்திலிருந்து எப்போதாவது நிகழுக்கு வலசை வருபவனென்று நிந்தனைச் செய்கிறது வாழ்வோடையின் வழுவலில் நகர்ந்திடும் இளைய குரல் வாழ் நாட்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்திலேயே வாழ்ந்திறந்திட வேண்டும் இல்லையேல் முடிந்த காலத்தில் மூழ்கி சிறகுகளைப் பிய்த்தெறிந்து இரத்தம் உறையும் உடலை மறந்து இறக்க நேரிடும் என்கிறது பேசாமல் இருந்தே கம்மிப்போன முதிய குரல் இருள் அப்பிய குரல்களின் தனிமையில் மூச்சடைக்க அழுத்தும் இரவுக்குள் இன்பமான ஓர் காதல் கனவைக் காண முயல்கிறேன் கார்த்திக் பிரகாசம்...