Skip to main content

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ்
மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன்
வகைமை: நாவல்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்

சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன்

மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது.

-கன்ஃபூசியஸ்

நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது.

மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன்.

எனக்குத் தமிழைத் தவிர்த்துப் பிற மொழிகளில் பரிச்சயம் கிடையாது. அலுவல் ரீதியான காரியங்களுக்காக வேண்டி ஆங்கிலத்தில் ஓரளவுக்குச் சமாளிக்க இயலுமே தவிரச் சரளமாக வாசிக்கவோ, உரையாடவோ, எழுதவோ அவசியமான மொழிப்புலமை அறவே கிடையாது. எனவே பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும் படைப்புகளின் மீது எப்பொழுதுமே எனக்குத் தனித்த ஈர்ப்பும், பெருங் காதலும் உண்டு. மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து வாங்கிய சில நூல்களின் மொழியாக்கம் ஏமாற்றம் அளித்திருக்கின்றன என்பதையும் இங்குப் பதிவு செய்கிறேன். ஆனால் அதனைப் பிரதானமாக முன்னிலைப்படுத்தி மற்ற படைப்புகளை என்றுமே ஒதுக்கியதில்லை. இந்த நாவலைக் குறித்துக் கேள்விப்பட்ட போதும்கூட உடனே மொழிபெயர்ப்பு இருக்கிறதா என்றுதான் இணையத்தில் தேடிப் பார்த்தேன். கோ.கமலக்கண்ணன் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிந்தபோது உள்ளபடியே மனதில் ஓர் உவகை தோன்றியது. ஏனென்றால் அவரது மொழி பெயர்ப்புகளை ஏற்கனவே வாசித்திருந்ததன் பேரிலான நம்பிக்கை. அது கொஞ்சமும் வீண் போகவில்லை. எந்தப் பக்கத்தை எதேச்சையாகத் திருப்பினாலும் புழக்கத்தில் இல்லாத அல்லது அன்றாடத்தில் அதிகம் நாம் பயன்படுத்திடாத தமிழ்ச் சொற்கள் விரவிக் கிடக்கின்றன.

[ஊழ்கம், தெம்மறந்தை, புவனம், ஆகூழ், சுவனம், உந்தம், ஒருக்கி, இன்தருணம் - சட்டென நினைவில் தோன்றியவை]. இயல்பாகவே மொழிபெயர்ப்பை வாசிக்கும் போது உண்டாகும் சிக்கலைத் தவிர்க்கப் பண்ணி, சரளமான மொழியில் தேர்ந்தெடுத்த பொருத்தமான சொற்கள் மூலம் உணர்ச்சிகளைக் கடத்துவதன் மூலம் மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தை தருவதாக இந்நாவலின் மொழியாக்கம் அமைந்துள்ளது .

சோர்பா அபூர்வமானவன்.

எத்துணைப் பெரிய மேதைக்கும் அவனால் பாடம் கற்பிக்க இயலும். அவர்களின் மேதைமைத் தன்மையையே கேள்விக்குள்ளாக்க முடியும். ஏனென்றால் அவன் தற்கணத்தில் வாழும் மனிதன். தற்கணத்தின் மகிழ்ச்சியும், துயரமும் மட்டுமே அவனுக்குப் பிரதானம். அவற்றையுமேகூட தன் கட்டுக்குள் வைத்திருப்பவன். அவன் எதையும் நம்புவதில்லை. யாரையும் நம்புவதில்லை. குறிப்பாக மகா முரடனாகத் திகழும் சக மனிதனை அவன் ஒருபோதும் நம்புவது இல்லை. ஏனென்றால் மனிதனை நம்பினால் கடவுளை நம்ப வேண்டும். கடவுளை நம்பினால் வேறு வழியில்லை பின்பு சாத்தனையும் நம்பித் தொலைக்க வேண்டும். அவனுக்குக் கடவுளும் வேண்டாம். சாத்தானும் வேண்டாம். தன்னைத் தவிர வேறெந்த மனித மிருகத்தையும் அவன் நம்புவதில்லை. தன்னை நம்புவதற்குமே, மற்றவர்களை விடத் தான் சிறந்தவன் என்ற சுயபற்றேண்ணத்தினால் அல்ல. தன்னால் கட்டுப்படுத்த முடிந்த ஒரே மனிதன், தான் மட்டுமே என்ற யதார்த்த எண்ணத்தின் வெளிப்பாடு அது.

அதுபோலவே, எந்தவொரு மனிதனையும் அவன் வெறுப்பது இல்லை. நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி மட்டுமே அவனுள் எழுகிறது. வயது முதிர முதிர அந்தக் கேள்வியையும் கேட்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். குறிப்பாக அவனால் பெண்களை வெறுக்கவே முடியாது. பல பெண்களோடு உறவு கொள்கிறான். அவன் உடலுறவு கொண்டதாகச் சொல்லும் அனைத்துப் பெண்களுமே விதவையாக, ஆண்களால் விரட்டப்பட்டர்களாக இருக்கிறார்கள். அத்தகைய பெண்களை மகிழ்விப்பதைத் தனது வாழ்நாளின் மகத்தான பணியாகவே கருதுகிறான்

அவன் உடலுறவு கொள்ளும் முதிர்பெண் ஒருத்தி, உச்ச நிலையில் அவளது முன்னால் காதலனின் பெயரை முணுகுகிறாள். அவனுக்கு அது உறுத்தலாக இல்லை. அக்கணத்தில் தோன்றிடும் உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு சிந்தனையால் மட்டுமே அணுகுகிறான்.

அதாவது, உடல் இன்பத்திற்கு மட்டுமேயான பிரதான இடத்தில் மற்ற உணர்ச்சிகளுக்கு என்ன வேலை என்ற சிந்தனை. ஆனால், அவளது உயிர் பிரியும் தருணத்தில், உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் சிந்துகிறான். உண்மையாகவே அவளுக்காக வருத்தப்படுகிறான். அடுத்த சில மணி நேரங்களிலேயே அதிலிருந்து வெளிப்பட்டு அடுத்த வேலையைக் காணச் செல்கிறான். தற்கணத்தில் வாழ்ந்திடும் மனிதன்.

மக்களுக்குப் பிரயோஜனமில்லாத மேலும் அவர்களைச் சுரண்டித் தின்னும் மத நிறுவனங்களை, அதன் பேரில் பொய் வேஷம் பூண்டு அலையும் போலி துறவிகள் மற்றும் பாதிரியார்களை எள்ளி நகையாடுகிறான். அவனைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல இதயத்திற்குள் கடவுளை அடக்கி வைக்க இயலும்.

மனதில் புரையோடியிருக்கும் அழுத்தத்தைத் துளையிட்டு வெளியேற்ற அவனுக்குச் சொற்கள் போதுமான அளவிற்கு உதவி புரிவதாக இருக்கவில்லை. ஆகையால் அவன் நடனத்தைத் தேர்வு செய்கிறான். தன்னிலை மறந்து வெறித்தனமாக வானுக்கும் மண்ணுக்கும் குதித்து தன் ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துகிறான். மொழி தெரியாதவனிடம்கூட, தான் நினைப்பதை நடனமாடி வெளிப்படுத்த முடியும்.

நம்முடைய நம்பிக்கைகளையும், ஒழுக்க கட்டுப்பாடுகளையும், டன் கணக்கான காகிதத் தாள்களில் வரையறுத்து வைத்திருக்கும் தத்துவக் கோட்பாடுகளையும் கேள்வி கேட்கிறான். அதற்காக அவனுக்கென்று தத்துவம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

சோர்பாவிடமும் தத்துவம் உள்ளது. அறம் உள்ளது. ஆனால் அவற்றில் போதனைகள் இல்லை.

சோர்பா தற்கணத்தில் வாழச் சொல்கிறான். அதன் மூலம் அவன் அடையும் எளிய இன்பங்கள் அற்புதமானவையாக இருக்கின்றன.

தாய்நாடு, போர், காதல், திருமணம், பாசம், செல்வம், மதம், மரணம், வெறுப்பு என சகல விதமான மானுட பற்றுதல்களிலிருந்தும் அடையும் விடுதலையை முன்னிருத்துகிறான். அதன் விடுதலையின் வாயிலாக தற்கணத்தின் மகிழ்ச்சியில் திளைத்திட மானுட சமுகத்திற்கு அறைகூவல் விடுக்கிறான்.

“சோர்பா என்ற கிரேக்கன்” தமிழ் இலக்கியப் பரப்பில் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலாக நினைவுகூரப் படுவதோடு மட்டுமின்றி, முழுக்க முழுக்க கமலக்கண்ணனின் மொழியாக்கத் திறனையும், மொழிச் செறிவையும், சொல் தேர்வையையும் பிரதானமாக முன்னிலைப்படுத்தும் செம் பிரதியாகவும் நீடித்து நிலைத்திருக்கப் போகும் செறிவான படைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...