"வேலை"- பட்டப் படிப்பை முடித்து
வரும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்கையில் முதல் படி. ஒவ்வொவருக்கும் "கனவு
வேலை"(ட்ரிம் ஜாப்) என்று
ஒன்று இருக்கும். அதைத் தேடித்தான் தனது தேடலையும் தொடங்குவார்கள். ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு அது கனவாகத் தான் முடிகிறது. இறுதியில் கிடைக்கும் ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது
குடும்பத்திற்காகவும் மற்ற பிற சூழ்நிலைகளாலும். இதனால் தான் என்னவோ அதனைக் கனவு வேலை என்று அழைத்தான்
போலிருக்கிறது அந்த இளைஞன்..
ஒவ்வொருவருக்கும் தான்
செய்யும் வேலைத் தான் மிக கடினமானதாகத் தோன்றும். அது தான் நியாமும் கூட.ஆனால் மிக
கடினமான மன அழுத்தம் நிறைந்த வேலை என்பது தனக்கான
வேலையைத் தேடுவது தான். வேலைக்குச் செல்பவன் கூட காலையில் 9 மணிக்குத் தான் கிளம்புவான் ஆனால் வேலைத்
தேடுபவன் 7 மணிக்கே கிளம்ப
வேண்டியதிருக்கும். காலையில் சாப்பிடாமல் ஏதோ ஒரு டீ கடையில் ஒரு "டீ
வடையுடன்" அன்றைய தேடல் தொடங்கும். ஊரின் ஏதோ ஒரு கடைக்கோடியில் உள்ள ஒரு
சிறிய கம்பெனிக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றால் அவர்கள் சில மணி நேரம் காக்க
வைப்பார்கள். இன்று எப்படியாவுது வேலைக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை
மனதுக்குள் வரும் போது அந்தக் கம்பெனியின் செக்யூரிட்டி சம்மந்தமில்லாத காரணத்தைச்
சொல்லி தட்டி கழிக்க பஸ் செலவு செய்து வந்ததை யோசித்து மற்ற சிறு சிறு
கம்பனிகளுக்குச் சென்று வேலைப் பற்றி கேட்டால் மேனேஜர் ஊரில் இல்லை நீங்கள்
வேண்டுமென்றால் உங்கள் விவரத்தைக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்பான்
அந்தக் கம்பனியின்
"செக்யூரிட்டி". ஒரு ஏளனப் பார்வை பார்த்து சிரித்துக் கொண்டே அதைப் பெற்று
கொள்வான் . இப்படி ஒவ்வொரு கம்பெனியாகச் சென்று கொண்டிருக்கும் போதே சூரியன்
எனெர்ஜியை ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிக்
கொண்டு இருப்பார். விளைவாக வயிற்றின் அறைகள் பசியால் கதவைத் தட்டும். ஒரு
சாலையோரக் கடையில் மதிய உணவை முடித்துக் கொண்டு மறுபடியும் அந்த தேடல் தொடங்கும்.
இந்த தேடல் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடுவதில்லை. வருடக் கணக்கில் கூட
நீளலாம்.
ஏதோ ஒரு
வேலைக்குச் செல்லலாம் என்றால் படித்தப் படிப்பே அதற்கு தடையாக நிற்கிறது. பல
கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கற்ற அந்த படிப்பை எப்படி விட்டுவிட்டு
சம்மந்தமில்லாத வேலைக்குச் செல்வது. வேலைத் தேடும் ஒவ்வொரு இளைஞனும் மிக புத்திசாலி இல்லை
அவனுக்கு அவன் துறைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் தெரியும் என்றும் அர்த்தம்
இல்லை. மாறாக அந்த இளைஞன் நினைப்பதெல்லாம் தனக்கு தெரிந்த ஓரிரு துறைச் சார்ந்த
விஷயங்களை வைத்துக் கொண்டு ஏதேனும் புதுமையை உருவாக்க வேண்டும் அதன் மூலம்
பிறவனற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.
ஆனால் ஒரு வகையில் இது நல்லது தான். பன்னிரண்டு
வருட பள்ளி படிப்பும் நான்கு வருட கல்லூரி படிப்பும் சொல்லித் தராததை இந்த வேலைத்
தேடும் நாட்கள் கற்று தருகின்றன. வாழ்கையில் சகிப்புத் தன்மையையும் பொறுமையையும்
அனுபவத்தினால் பெற்றுக் கொள்ள இந்த நாட்கள் உதவுகின்றன.
வேலைத் தேடி வேலைத் தேடி இறுதியில் வேலைத்
தேடுவதே ஒரு பெரும் வேலையாகி விட்டது..
கார்த்திக்
பிரகாசம்...
Comments
Post a Comment