Skip to main content

நான் கண்ட மனிதர்..

   வாழ்வில் மிக அவசியமான குணாதியசங்களைக் கற்றுக் கொள்ள அரிய புத்தகங்களையும் பெரிய ஞானிகளையும் அறிஞர்களையும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதர்கள்  ஆழமான நிஜங்களை வெகு எளிதாக புகுத்தி விட்டுச் செல்வார்கள்.. அப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்..

   பட்டமளிப்பு விழாவிற்குக் கல்லூரிக்கு செல்வதற்காக  வேலைப் பார்க்கும் கம்பெனியில் விடுமுறையுடன் சேர்த்து  பல திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அன்று கிளம்பினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேண்டுமென்றே ""கட்"" அடித்து விட்டு ஊர் சுற்றுவதும் அதே கல்லூரிக்கு வருடம் கழித்து பழைய பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்துக் கொண்டு செல்வதும் அரிய சுகம். ஏனென்றால் அந்த கல்லூரி நாட்களுக்குப் பின்னால் கண்ணாடி முன் மட்டும் சொல்லப்பட்ட காதல், சொல்லி மறுக்கப்பட்ட காதல், இக்கட்டான சூழ்நிலையில் நண்பனின் உதவி, தன்னை பற்றி அப்பாவின் மனநிலை, கேட்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகள் என்று மனதை விட்டு நீங்க மறுக்கும் சுகமான சுவடுகள் இருக்கும். 

   வழக்கம் போல கடைசி நிமிடத்தில் இரயிலில் ஏறி உள்ளே இடம் இல்லாததால் படிக்கட்டில் அமர்ந்தேன்.இரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் போது மணி இரவு 8:25. திருவள்ளூர், அரக்கோணம்,காட்பாடி என்று அடுத்தடுத்த மார்க்கங்களை நோக்கி விரைவாக கடந்துச் சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் இரயில் ஜோலார்ப்பேட்டை நிறுத்தத்தை அடைந்தது. டீ காபி டிபன் தண்ணீர் பாட்டில் என அனைவரும் இரயில் பெட்டியை மொய்த்தனர். நான் இருந்த பெட்டியில் பலரும் டீ வாங்கினர்.இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஆனால் அப்பொழுது  தான் ஒவ்வொருவராக தங்கள் டீக்கான பணத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தனர். மொத்தப் பணமும் டீ விற்பவர்  கைக்கு வந்து சேரவில்லை ஆனால் அதற்குள் இரயில் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. அவர் அந்த மீதி சில்லறையைப் பெறுவதற்காக டீக்கேனைத் தூக்கிக் கொண்டு இரயில் கூடவே ஓடி வந்தார். அந்த டீ விற்பவர் ஐந்து ரூபாய் சில்லறைப் பெறுவதற்காக ஓடி வந்தும் உரிய நபர் மெத்தனமாக இருந்ததால்  அவர் மீது மிகுந்த கோபம் வந்தது. டீ விற்பவர் இரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தனது ஓட்டத்தைக் குறைக்கும் தருணத்தில் அந்த நபர் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை ஜன்னலின் வழியே தூக்கி எறிந்தார்.. எனக்கோ அந்த நபர் மீது நிறைய கோபம் வந்தது ஆனால் அந்த டீ விற்பவரோ கொஞ்சம் கூட சலனபடாமல் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தைத் தேடி எடுத்துக் கொண்டு அடுத்த இரயிலை நோக்கி விரைந்தார்.. இந்த நிகழ்வு நடந்தது நள்ளிரவு சுமார் 1 மணிக்கு...

இது  இரயில் பயணத்தின் போது மிக சாதாரணமாக நிகழும் நிகழ்வாக பலரும் நினைக்கலாம். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த டீ விற்பவர்  என் மனதில் பல தாக்கங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார். தான் செய்யும் வேலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை விரும்பிச் செய்ய வேண்டும்.அதற்கு முதலில் தான் செய்யும் வேலையைக் காதலிக்க வேண்டும். தான் மட்டும் தான் இவ்வளவு கஷ்டபடுகிறேன் என்ற எண்ணத்தை மனதை விட்டு அடித்து துரத்த வேண்டும். தன்னிடம் இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் எதையும் எதிர்ப்பாக்காமல் எதற்கும் ஆசைப்படாமல். இவை அவர் எனக்குள் ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள்..

இது போன்ற நம்மை சுற்றியுள்ள சாதாரண மனிதர்கள் அசாதாரமாண விஷயங்களை மிக எளிதாக நம் மனதில் விதைத்து  விட்டு  செல்கிறார்கள். பயணத்தின் அது வரையில் படித்த படிப்பிற்காக பட்டம் வாங்க செல்கிறேன் என்று நினைத்து சந்தோச பட்டுக் கொண்டிருந்தேன். பிறகு தான் புரிந்தது நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் இது தான் என்று... இதேப் போல நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன என்பதையும் புரிந்து கொண்டேன்.

அவருக்கு வார்த்தைகளில் நன்றி சொல்ல இயலாமல் இரயிலின் ராகத்தோடு கலங்கிய என் கண்களில் நன்றி சொல்லி ஊர்ப் போய் சேர்ந்தேன்.   


கார்த்திக் பிரகாசம்...

Comments

  1. கார்த்திக் உன்னுடைய வார்த்தைகளில் உயிரோட்டம் உள்ளது அதானல் தான் படிக்கும்பொழுதே காட்சிகளாய் கண் முன் வந்து செல்கிறது என்று நினைக்கிறேன்
    அவர் தனது வேலையை கதலிகிறாரா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவர் கண் முன் தன் குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய கடைமைகளே வந்து சென்றிருக்கும் என்று தோன்றுகிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...