Skip to main content

முதல் சே(வே)லை..

     நண்பன் ஒருவன் பிரபல கம்பெனியின்  நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக "மறக்க முடியாத தருணம்"  என்ற தலைப்பில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு தருணத்தை ஒரு பக்க அளவில் தயார் செய்து வைத்திருந்தான் நேர்முகத் தேர்வுக்காக.. அதை அவன் எனக்கும் நண்பர்களுக்கும்  விவரித்தான். ஆனால் என் மனம் அதில் லயிக்கவில்லை. நான் என்னுள் புதைத்து  வைத்திருந்த மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொன்றாக அசைப் போட ஆரம்பித்தது என் மனம்.

     அதில் மிகவும் முக்கியமான ஒன்று. இது நம்  பல பேருடைய வாழ்கையில் அனேகமாக ஏற்பட்டிருக்கும். பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதுவும் வெளி ஊருக்கு. முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே 350 கிமீ கடந்து சென்னைக்கு .அப்படி இப்படி என்று அலைந்து  ஒரு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 6250. பிடிக்காத வேலை என்ற போதும் மிகவும் அலைந்து கிடைத்த வேலை என்பதால் விடவும் மனமில்லை. பிடிக்காத வேலை என்பதாலோ என்னவோ முதல் மாதம் முடிய ஏதோ ஒரு வருடம் ஆனது போல் இருந்தது.

    சம்பளம் 10 ஆம் தேதி கொடுத்தார்கள். அந்த கணம் நான் ஏதோ வாழ்கையில் பெரிதாக சாதித்தாக ஒரு உணர்வு.. ஆனால் அந்த உணர்வு வெகு நேரம் நீடிக்கவில்லை.  தங்கி இருந்த விடுதியை அடைந்த சில மணி நேரத்தில் வாடகை மெஸ் பில் மற்றும் பஸ் பாஸ் என்று அனைத்தும் போக மீதம் கையில் இருந்தது வெறும் 600 ரூபாய். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே  டீக்கடைக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் வித விதமாக சேலைகளை விற்பனைக்குத் தொங்க விட்டிருந்தனர்.. சேலையைப் பார்த்தவுடன் என் அம்மாவின் நினைவு என்னை முழுவதும் ஆக்கிரமித்தது.  அந்த நினைவுகளை  மறக்க தோன்றாமல் உடனடியாக கடைக்குள் சென்று என் கையில் இருந்த பணத்திற்கு ஏற்றவாறு எனக்கு பிடித்த சேலையை எடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

     அந்த வார கடைசியில் அம்மாக்காக வாங்கிய சேலையை எடுத்துக் கொண்டு ஊருக்கு ஒரு விதமான வெளிபடுத்த முடியாத சந்தோசத்துடன்  சென்றேன். ஆசை ஆசையாய் வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் அந்த சேலையைக் காட்டினேன். அம்மா மிக சாதாரணமாக எனக்கு எதுக்கு டா சேலை என்கிட்ட சேலையா இல்ல என்று சட்டென்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டார். அது வரையில் இருந்த அத்தனை சந்தோசமும் கானல் நீர் போல நொடி பொழுதில் காணாமல் போனது. வருத்ததுடன் ஏதோ பேருக்கு சாப்பிட்டுவிட்டு உறங்கினேன்.

     அன்றும் வழக்கம் போல நான் தான் கடைசியாக தூங்கி எழுந்தேன். எழுந்த போது தான் அந்த அதிர்ச்சி கலந்த ஆனந்தம் கிடைத்தது. அம்மா வீட்டின் பால்கனியில் நின்றுக் கொண்டு எதிர் வீட்டு அக்கா பக்கத்துக்கு வீட்டு அம்மா மற்றும் கீழே இருக்கும் பாட்டி என்று அனைவரிடமும் என் மகன் எனக்காக சென்னையில் இருந்து  அவன் காசுல எனக்கு சேலை வாங்கிட்டு வந்துருகான் என்று மிக பெருமையாக சந்தோசமாக சொல்லிக் கொண்டு இருந்தார்.  இன்னும் தூங்குவது போல் நடித்துக் கொண்டு அம்மா சொல்லும் அத்தனையும்  கேட்டுக் கொண்டிருக்கையில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வாழ்க்கையில் முதன் முதலாக நான் சந்தோசமாக அழுத தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இனி எத்தனையோ இது போன்ற தருணங்கள் ஏற்பட்டாலும், அம்மாவிற்கு நான் சம்பாதித்த பணத்தில் எடுத்து தந்த சேலை போல இருக்காது.    

      நான் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டுக் கொண்ட என் நண்பன் என்னை தட்ட நான் சுதாரித்துக் கொண்டு ஓரத்தில் கசிந்துக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு ஆமா மச்சி நீ சொன்னது கரெக்ட் என்று சமாளித்து விட்டு என் நினைவுக்கு பிரியாவிடைக் கொடுத்துவிட்டு  உறங்க சென்றேன்..  

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...