திருமணம் நிச்சயமானவர்களுக்கு சென்னைத் தரும் முதல் சவால் "வாடகை வீடு". சென்னையில் பத்தாயிரத்துக்குள் ஒரு வீட்டைப் பிடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. வாடகையைத் தாண்டி பராமரிப்புக் கட்டணம், தனி மின் கட்டணம், தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்ய கட்டணம், செக்யூரிட்டி கட்டணம் என்று வீட்டு வாடகைக்கான மாத பட்ஜெட் மட்டும் மொத்த சம்பளத்தில் முக்கால்வாசியை முழுங்கிக் கொண்டு நிற்கும். திருமணமாகும் வரை கோடம்பாக்கம்,வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், தி.நகர், திருவான்மியூர் என்று நகரின் பளிச்சிடும் பருந்து கண்களின் பார்வைக்குள் குடியிருப்பவர்களெல்லாம் திருமணமானதும் மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை, மேடவாக்கம், குன்றத்தூர் மற்றும் கீழ்கட்டளை போன்ற மாநகரத்தின் கண்மறைவான பகுதிகளில்(இப்போதைக்கு) ஒதுங்கிக் கொள்கின்றனர். வாடகைக்குப் பயந்து "நகரம் என்று ஒத்துக்கொள்ளவே முடியாத நகரத்தின் ஏதோரு மூலையில்" வசித்துக் கொண்டு, வீட்டிற்கும் வேலைப் பார்க்கும் இடத்திற்கும் இடையே உள்ள பல மைல் தொலைவை பாதி தூரம் பேருந்து பாதி தூரம் மின்சார ரயில் அல்லது பாதி தூரம் இருசக்கர வாகனம்" என்று நடுத்தரவர்க்கம் ஓய்வறியா ந...