வெகுநேரமாக நின்றுக் கொண்டிருக்கும் வேளையில் இருக்கைக் கிடைத்தாலே மனம் குதூகலமாகிவிடும் அதிலும் ஜன்னலோர இருக்கையே கிடைத்துவிட்டால் சொல்லவா வேண்டும்...! பெரும்பாலானோர் கிண்டியில் இறங்கிவிட்டதால் இருக்கைக் கிடைத்தது. எனக்கு முன்வரிசையில் இருந்த ஜன்னலோர இருக்கையில் சிறுவன் வந்து உட்கார்ந்தான். ஜன்னலோர இருக்கைக் கிடைத்துவிட்டதால் அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. எதையெதையோ காட்டி அப்பாவிடம் கதைச் சொல்கிறான். பார்வையை விசிறி கட்டிடங்களைப் பின்னே தூக்கியெறிகிறான். கைகளைக் கத்தியாக்கி வெளிச்சங்களை வெட்டி வீசுகிறான்.எட்டிப் பார்த்து கார்களுக்கு டாடா சொல்கிறான். கண்ட காட்சிகளையெல்லாம் கண்களில் விழுங்குகிறான். அவனின் கற்பனைத் திறன்களை காற்றில் நிறைக்கிறான்.காற்றைத் தாகம் தீரக் குடிக்கிறான்.பிறகு அள்ளிப் பூசிக் கொள்கிறான்.அவ்வப்போது அவன் கண்கள் விரிகின்றன. கைகள் நீள்கின்றன. கேசங்கள் நேசம் கொள்கின்றன. கால்கள் குதூகலிக்கின்றன.அந்தச் சிறுவன் தன் குடும்பத்துடன் சிஐடி நகரில் இறங்கிய வேளையில் நான் சிறுவனாகியது போலொரு உணர்வு உடலெங்கும் பரவியிருந்தது. ஜன்னலோர இருக்கைக்கு ஏதோ சக்தி இருக்குமோ என்றுக்கூட தோன்றியது.
நடத்துனர் ஊதிய விசிலில் பேருந்துக் கிளம்பியது. ஜன்னலின் வழியே அந்தச் சிறுவனை எட்டிப் பார்த்தேன். அவன் இப்போது வளர்ந்திருந்தான்.
கார்த்திக் பிரகாசம்...
நடத்துனர் ஊதிய விசிலில் பேருந்துக் கிளம்பியது. ஜன்னலின் வழியே அந்தச் சிறுவனை எட்டிப் பார்த்தேன். அவன் இப்போது வளர்ந்திருந்தான்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment