Skip to main content

டாக்டர் கனவு

பரீட்சை நடக்குற சமயத்துல இராத்திரி நான் தூங்கப் போறப்பவும் சரி; காலைல ஷிப்டுக்காக விடியகாத்தால மூணு மணிக்கு எந்திரிக்கறப்பவும் சரி, எப்ப பாத்தாலும் படிச்சிகிட்டேதான் கெடக்கும். "ஏம்மா...! கொஞ்ச நேரம் தூங்கேனு" சொன்னா... பரவால்லப்பா பரீட்சை முடியற வரைக்கும் தானே"ன்னு சொல்லும். இராத்திரி பகலா நேரம் காலம் பாக்காம கண்ணு முழிச்சு படிச்சிது தம்பி. ஆனா என்ன பிரயோஜனம். நம்ம தலைல என்ன எழுதிருக்குதோ அதான்ன நடக்கும்.

"ஏன்ணா.? மார்க்கு கொறைஞ்சு போச்சா..?"

"மார்க்கெல்லாம் இருநூறுக்கு நூத்தி தொண்ணுத்தி எட்டு கட் ஆஃப் எடுத்திருச்சி தம்பி."

"அப்றம் என்னண்ணா.?"

"எல்லாம் நாசமாப் போன இந்த நீட்டு தான்."

கடைசி நேரத்துல தமிழ்நாட்டுல எங்கையும் சென்டர் இல்ல கேரளாக்குத் தான் போகணும்னு சொன்னப்பவே புள்ள ஒரு மாதிரி ஆயிட்டா".... பின்ன... 'அப்பன் படற கஷ்டம் தெரிஞ்ச பொண்ணாச்சே தம்பி'. நான் தான் தேத்தி, ஒருநாள் லீவு போட்டுட்டு கேரளாக்குக் கூட போய்ட்டு வந்தேன். ரிசல்ட் வரவரைக்கும் வீட்ல யார்கூடையும் ஒன்னும் பேசாம வாய மூடிக்கிட்டே தான் இருந்தா. அவ பயந்த மாதிரியே அவனுங்க வச்ச நீட்டு பரீட்சைல புள்ளையால மார்க் எடுக்க முடியல. பெயில் ஆயிடுச்சு.

கஷ்டப்பட்டு படிச்சா.. நானும் எப்பாடுபட்டாவது புள்ளைய டாக்டர் ஆக்கிரலாம்னு கனவுக் கண்டேன். "நீயெல்லாம் எப்படிடா புள்ளைய டாக்டராக்கக் கனவு காணலாம்னு யாரோ தலைல அடிச்சி எழுப்புன மாதிரி இருந்துச்சு. நொந்து போய்ட்டேன். படிக்காத புள்ளய இருந்தாக் கூட பரவால்ல தம்பி. நல்ல அறிவிருக்குற பொண்ணு. பொறந்ததுல இருந்து இதுநாள் வரைக்கும் எனக்கு அத வாங்கிக் கொடு இத வாங்கிக் கொடுன்னு ஒருவாட்டிக் கூட கேட்டதில்ல தம்பி. அவ ஆசைப்பட்டது இந்த டாக்டர் படிப்ப தான். ஒரு அப்பனா அதக்கூட என்னால பண்ணமுடில. அத நெனைச்சா தான் தம்பி தாங்க முடியல. இதே பணம் காசு மட்டும் இருந்திருந்தா 'லட்சக் கணக்குல காசு போனாலும் மயிராச்சு'ன்னு ஏதாவது பிரைவேட் காலேஜ்'ல சேர்த்துவிட்ருப்பேன்"

நான் கஷ்டப்படறத பாத்து அவ ஆசையெல்லாம் மறைச்சுக்கிட்டு ஒருநாள் என்கிட்டே வந்து சொல்றா, "டாக்டர் இல்லனா என்னப்பா... நான் பயோ மெடிக்கல் படிக்கிறேன். அதும் டாக்டர் படிப்பு மாதிரி தான்.. நீயெதும் கவலபடாதன்னு. அவ்வளவுதான் அந்த நிமிஷம் " உயிரோட மொத்த வலியும் ஒரேடியா கண்ணீரா வந்துருச்சு"

கவலப்படாதிங்கண்ணா...!!!

அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. இந்த நாட்டுல "எல்லாம் இருக்குறவனுக்கு தான் எல்லாம் கெடைக்குது. எதுவுமே இல்லாதவன்கிட்ட இல்லாம மட்டும்தான இருக்கு"

"இது வயித்தெரிச்சல்ன்னு நெனைக்காத தம்பி. எல்லாத்துக்கும் கெடைக்குறது யாரோ ஒருத்தர் எனக்கு மட்டும் கெடைக்க விடாம செய்றப்போ உண்டாவுற வலி...! ஏக்கம்...!"

புரியுதுண்ணா..! ஆனா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில...!

சரி அத விடுங்க தம்பி...! நீங்க வெள்ளக் கோட்டு போட்ருக்கவும் ஏதோ என்னையும் அறியாம என் கதையச் சொல்லிட்டேன்..! மனசுல ஏதும் வச்சுக்காதீங்க..! ராமகிருஷ்ணா தானா..! இந்தா ஸ்டாப் வந்துருச்சு பாருங்க...!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...