Skip to main content

தோற்றவன்

கனவில்
ஓர் பாராட்டு விழா
தோற்றவர்களெல்லாம் மேடையில்
வீற்றிருக்கிறார்கள்
ஒன்றிலும் ஜெயித்தவர் ஒருவர் கூட
இல்லை
அரங்கத்தில்
இதுவரையில் பலமுறை தோற்றவர்களும்
உடனடியாக தோற்கயிருப்பவர்களும்
வரிசை வரிசையாக
அமர்ந்திருக்கின்றனர்
ஆனால் எப்படி எல்லாரும்
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
எவருடைய முகத்திலும்
துளிக்கும் கவலை இல்லை
எனக்கோ ஆச்சர்யம்
தோற்ற பிறகு வருத்தமில்லாமல்
உங்களால் எப்படி
சிரிக்க முடிகின்றது
கேட்டே விட்டேன்
அதற்கும் அவர் சிரித்தார்
நண்பா..!
நாங்கள் தோற்றுவிட்டோம்
உண்மை தான்
ஆனால் நாங்கள்
முயற்சிக்கிறோம்
தொடர்ந்து முயற்சிப்போம்
வெற்றியோர் அனுபவம்
முயற்சியோர் வழிமுறை
தோல்வியே பாடம்
நாங்கள் பாடம் கற்கிறோம்
மறுபடியும் புன்னகை
அப்போது தான்
முகத்தைப் பார்த்தேன்
அது என் முகம்
உற்று நோக்கினால்
அரங்கம் முழுவதும்
என் முகங்களே

கார்த்திக் பிரகாசம்...

Comments