Skip to main content

Posts

Showing posts from November, 2019

அலங்கார பொய்

ஆராத கற்பனைப் பசிக்குப் பொய்யே தீனி  அலங்கோல உண்மையைக் காட்டிலும்     அலங்கார பொய்க்கு அசைந்திடும்  காதுகளே அதிகம்  இருப்பினும்   பொய் பொய்யாகவே  இருக்கும் வரையில்  உள்ள சுவாரசியம்  உண்மையாகும் போது  இருப்பதில்லையென்பது  உண்மை கார்த்திக் பிரகாசம் ... 

கண்காட்சி

நண்பனின் திருமண ஆல்பம் புரட்டுகிறேன் கண்களைக் குளிர்ச்சியாக்கும் வண்ணம் தொடையில் வைத்தால் வழுக்கிச் செல்லும் நைலான் மாதிரியான அட்டைகள் அட்டையின்மேல் முழுவதும் இல்லை ஆங்காங்கே வெல்வெட் அலங்காரங்கள் கோணல் மாணல் இல்லாமல் துல்லிய கோணத்தில் பதிய தலைக் கீழாய் நின்று மயிர்ப் பிய்த்து மல்லாக்கப் படுத்து இன்னும் எப்படியெல்லாமோ வித்தையைக் கொட்டியிருக்கிறான் புகைப்படக்காரன் பளீரென்று வெளிச்சத்தை தெளிக்கும் மஞ்சள் விளக்கும் முகத்திலுள்ள மாசு மருக்களை மூடி மறைக்கும் அதிநவீன ஆடிகளும் அவர்களின் முகத்தில் ஏதோ அவசரத்தையும் அசௌகரித்தையும் அறைந்திருக்கக் கூடும் பார்வையும் புன்னகையும் பதற்றத்தினால் யதார்த்தமாக இல்லை தொடுவது போல் தொட்டும் சாய்வது போல் சாய்ந்தும் ஊட்டுவது போல் ஊட்டியும் பொய் கோபம் போல் கோபம் காட்டியும் கொஞ்சுவது போல் கொஞ்சியும் பதிய வைக்கப்பட்டுள்ள படங்களில் கண்காட்சியாய் துறுத்தி நிற்கிறது செயற்கைத் தனம் யதார்த்தமென்று நம்பவைக்க எடுக்கப்பட்ட யதார்த்தமில்லா படங்களை என்னவென்று சொல்ல ஆங்கில வார இதழைப் போல் சடசடவென புரட்டி முடித்துவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

அருவருப்பு

இவர்களுக்கு என்னப் பிரச்சனை  தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை  முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு என்று  தெளிவாக எழுதி வைத்துவிட்டு தானே  தற்கொலை செய்துக் கொண்டேன்  பிறகு ஏன் ஆளாளுக்கு ஒரு காரணம்  கற்பித்தவாறு இருக்கிறார்கள்  கேட்கக் காதும் ஆட்ட மண்டையும் கிடைத்துவிட்டால் போதுமே அந்த வெள்ளைச் சட்டைக்காரன் சொல்கிறான்  'எனக்குக் கள்ளக் காதலன் உண்டாம்  வயிற்றில் பிள்ளை உண்டாயிற்றாம்  அதை மறைக்கவே' அரக்குச் சேலைக்காரி புலம்புகிறாள் 'புருஷன் புல்லனாக இருந்தால் பொம்பளைங்க கதி இதான்' முன்னாள் காதலன்  'இவள் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள் அரிப்பெடுத்தவள் என்றறிந்தே விலகிவிட்டேன்' பெருமூச்சு விடுகிறான் பத்திரிக்கைக்குத் தெரிந்தால் இன்னும்  என்னென்ன எழுதுவார்களோ இவர்கள் செய்திடாத தற்கொலைக்குத் தகுதியென நினைக்கும் காரணங்களை  என் நிணத்தின் மீது வீசுகிறார்கள் இம்மனிதர்களுக்கு மத்தியில்  பிணமாய்க் கிடப்பதும் கூட அருவருப்பாய் இருக்கிறது கார்த்திக் பிரகாசம்....

பிரபஞ்சன் வருந்துகிறார்

பிரபஞ்சன் வருந்துகிறார், 'பெரும்பாலும்  பெண்களின் மகிழ்ச்சி  தொலைப்பாளர்கள் கணவர்களாக தந்தையர்களாக சகோதரர்களாகவே இருக்கிறார்கள்' சரி தான். ஆணுக்கான பதவிகள் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் அடையாளமாக தரித்திருப்பவை வெளியில் பாசாங்கு காட்டி பவிசாக நகர்பவை உறவில் அதிகாரம் ஒருபோதும் உகந்ததாய் இருக்கலாகாது கணவனாய் தந்தையாய் சகோதரனாய் வாழ்வதில் என்ன இருக்கிறது ஓர் நண்பனாய் இருந்துவிட்டு போவோம் கார்த்திக் பிரகாசம்...

ஆம்புலன்ஸ்

எத்தனையோ முறை அலறிக் கொண்டே சாலைகளை விலக்கியோடும் ஆம்புலன்ஸை அச்சத்தோடு  விழித்திருக்கிறேன் அந்த அலறல் சத்தம் மரணத்திற்கு மிக அருகில் சென்றுவிட்ட ஒர் உயிரின் அபாயக் குரலின் எதிரொலியாய்  செவிகளை ஊசிமுனையால்  குத்திவிட்டுச் செல்லும் வெளிக்கு பாதிமட்டும் காட்டும் கண்ணாடி வேனுக்குள் பளீரென்ற வெள்ளையொளி  விரவியிருக்கும் பிரியமானவரின் மரணத்தை  இன்னும் சிலகாலம்  தள்ளிப் போடும் முயற்சியில்  கவலையை அணிந்துக் கொண்ட  ஓர் உருவத்தின் கண்கள் சோகத்திலும் பரபரப்பது  தெளிவாகத் தெரியும் உடனே மனதிற்குள் மரணத்திற்கான ஒத்திகை நடக்கும் மடியில் என்னைக் கிடத்தியிருக்கும் தெளிவற்ற  அவ்வுருவம் ஏதேதோ சாயல்களில் என்னைக் கண்டு கதறும் கண்ணீர் வடிக்கும் கண்ணீரைத் துடைக்கும் தூக்கியடிக்கும் நெஞ்சைத் தடவி தலையைக் கோதிவிடும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் சுகமாக பிரியும் பாரங்கள் இலகுவாகும் மயிரைவிட உடல் லேசானதாகும் மரணம் ஒருபோதும்  சொல்லிக் கொண்டு வருவதில்லை ஆனால் எதையோ உணர்வித்துச்  செல்கிறது கண்ணீரை சுமப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட அவ்வெள்ளை ஊர்தி கடந்துச் சென்ற ஒவ...

பார்வையற்ற பலூன்கள்

மருமகனுக்கு ஊதிக் கொடுத்த பலூன்கள் வீடெங்கும் பற்பல வண்ணங்களில் பறந்தவாறிருக்கின்றன பாவம் அவைகளுக்குத் தெரியாது அவன் விடுப்பு முடிந்து திரும்பிச் சென்றுவிட்டான் என்று ஒருவேளை தெரிந்தால் சிரிப்புச் சத்தம் கேளாமல் கலையிழந்து வெற்று  கட்டடமாக நிற்கும் இவ்வீட்டை போல் அவையும் வாடி வற்றி சுருங்கிவிடக் கூடும் நல்லதாய் போயிற்று பலூன்களுக்கு நிறமுண்டு பார்வை இல்லை ஆதலால் பறக்கின்றன வெற்று கட்டடத்தின் சுவர்களில்  அவனின் சிரிப்புச் சத்தத்தை  உயிர்ப்பித்தபடி... கார்த்திக் பிரகாசம்...

நட்சத்திரங்கள்

வானில் நட்சத்திரங்கள்   காணாதது பெரிய குறையாக இல்லை கடற்கரை மணலில்  நிறைய குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருக்கின்றனர்  கார்த்திக் பிரகாசம்...