எத்தனையோ முறை
அலறிக் கொண்டே
சாலைகளை விலக்கியோடும்
ஆம்புலன்ஸை அச்சத்தோடு
விழித்திருக்கிறேன்
அந்த அலறல் சத்தம்
மரணத்திற்கு மிக அருகில்
சென்றுவிட்ட ஒர் உயிரின்
அபாயக் குரலின் எதிரொலியாய்
செவிகளை ஊசிமுனையால்
குத்திவிட்டுச் செல்லும்
வெளிக்கு பாதிமட்டும் காட்டும் கண்ணாடி வேனுக்குள்
பளீரென்ற வெள்ளையொளி
விரவியிருக்கும்
பிரியமானவரின் மரணத்தை
இன்னும் சிலகாலம்
தள்ளிப் போடும் முயற்சியில்
கவலையை அணிந்துக் கொண்ட
ஓர் உருவத்தின்
கண்கள் சோகத்திலும் பரபரப்பது
தெளிவாகத் தெரியும்
உடனே
மனதிற்குள் மரணத்திற்கான
ஒத்திகை நடக்கும்
மடியில் என்னைக் கிடத்தியிருக்கும் தெளிவற்ற
அவ்வுருவம் ஏதேதோ சாயல்களில்
என்னைக் கண்டு கதறும்
கண்ணீர் வடிக்கும்
கண்ணீரைத் துடைக்கும்
தூக்கியடிக்கும் நெஞ்சைத் தடவி
தலையைக் கோதிவிடும்
கொஞ்சம் கொஞ்சமாக உயிர்
சுகமாக பிரியும்
பாரங்கள் இலகுவாகும்
மயிரைவிட உடல் லேசானதாகும்
மரணம் ஒருபோதும்
சொல்லிக் கொண்டு வருவதில்லை
ஆனால் எதையோ உணர்வித்துச் செல்கிறது
கண்ணீரை சுமப்பதற்காக மட்டுமே
படைக்கப்பட்ட அவ்வெள்ளை ஊர்தி
கடந்துச் சென்ற ஒவ்வொரு தருணமும்
ஓர் உயிரின் மரண ஓலம்
அடங்கியது போலிருக்கும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment