இவர்களுக்கு என்னப் பிரச்சனை
தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை
முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு என்று
தெளிவாக எழுதி வைத்துவிட்டு தானே
தற்கொலை செய்துக் கொண்டேன்
பிறகு ஏன் ஆளாளுக்கு ஒரு காரணம்
கற்பித்தவாறு இருக்கிறார்கள்
கேட்கக் காதும்
ஆட்ட மண்டையும் கிடைத்துவிட்டால் போதுமே
அந்த வெள்ளைச் சட்டைக்காரன் சொல்கிறான்
'எனக்குக் கள்ளக் காதலன் உண்டாம்
வயிற்றில் பிள்ளை உண்டாயிற்றாம்
அதை மறைக்கவே'
அரக்குச் சேலைக்காரி புலம்புகிறாள்
'புருஷன் புல்லனாக இருந்தால்
பொம்பளைங்க கதி இதான்'
முன்னாள் காதலன்
'இவள் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள்
அரிப்பெடுத்தவள் என்றறிந்தே விலகிவிட்டேன்' பெருமூச்சு விடுகிறான்
பத்திரிக்கைக்குத் தெரிந்தால் இன்னும்
என்னென்ன எழுதுவார்களோ
இவர்கள் செய்திடாத தற்கொலைக்குத்
தகுதியென நினைக்கும் காரணங்களை
என் நிணத்தின் மீது வீசுகிறார்கள்
இம்மனிதர்களுக்கு மத்தியில்
பிணமாய்க் கிடப்பதும் கூட
அருவருப்பாய் இருக்கிறது
கார்த்திக் பிரகாசம்....
Comments
Post a Comment