மருமகனுக்கு
ஊதிக் கொடுத்த பலூன்கள்
வீடெங்கும்
பற்பல வண்ணங்களில்
பறந்தவாறிருக்கின்றன
பாவம்
அவைகளுக்குத் தெரியாது
அவன் விடுப்பு முடிந்து திரும்பிச்
சென்றுவிட்டான் என்று
ஒருவேளை தெரிந்தால்
சிரிப்புச் சத்தம் கேளாமல்
கலையிழந்து வெற்று
கட்டடமாக நிற்கும்
இவ்வீட்டை போல்
அவையும் வாடி வற்றி
சுருங்கிவிடக் கூடும்
நல்லதாய் போயிற்று
பலூன்களுக்கு நிறமுண்டு
பார்வை இல்லை
ஆதலால் பறக்கின்றன
வெற்று கட்டடத்தின் சுவர்களில்
அவனின் சிரிப்புச் சத்தத்தை
உயிர்ப்பித்தபடி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment