Skip to main content

Posts

Showing posts from October, 2020

அன்பின்வழிகள்

அன்பின்வழிகள் அடைக்கப்படுகின்றன ஆறுதல்கள் அதிகாரத்துக்கு உட்படுகின்றன ஆலோசனைகள் யாவும் சந்தேகத்துக்கு ஆளாகின்றன மௌனங்கள் கேள்வியாக்கப்படுகின்றன எளிமை ஏளனமாக்கப்படுகின்றன அமைதியும் பண்பும் கோழையாக்கப்படுகின்றன செயல்கள் அனைத்தும் நேற்றோடு ஒப்பிடப்படுகின்றன முத்தங்கள் யாவும் மறக்கப்படுகின்றன சுயத்தை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை அவர்களால் கார்த்திக் பிரகாசம்...

கனவு

கண்ட கனவெல்லாம்  நனவானது  கடைசியாகக்  கண்ட  கனவில்...!!! கார்த்திக் பிரகாசம்...

அடையாளம்

இப்பொழுதெல்லாம் யாருக்கும் என் முகம் தேவைப்படுவதில்லை குரல் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது குரலை வைத்து நான் தான் என அறிந்து கொள்கிறார்கள் என்றோ ஒரு நாள் சந்திக்கும் வேளையில் என்னை அடையாளம் தெரியாமல் போகலாம் ஆதலால் என் குரலைப் பத்திரப்படுத்த வேண்டும் என்னிடம் இருக்கும் உங்கள் குரல்களையும் தான் கார்த்திக் பிரகாசம்...

மௌனி

சலனமே இல்லாமல் மிக எளிதாக ஓர் இறப்பை ஏற்படுத்துகிறாய் மௌனிக்கிறேன் சிரிப்பைக் கொல்கிறேன் வெற்று உடலாகிறேன் மெல்லிய முத்தமொன்றை இதழ்களில் பதித்துவிட்டு உன் முகம் பார்க்காமல் நகர்கிறேன் கார்த்திக் பிரகாசம்...

மழை பெய்கிறது

நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள்  உங்களை மகிழ்விக்கவே மழை பெய்கிறது நீங்கள் சோர்வுற்று இருக்கிறீர்கள் உங்களை உற்சாகப்படுத்தவே மழை பெய்கிறது நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள் உங்களை ஈரப்படுத்தவே மழை பெய்கிறது நீங்கள் உணர்வற்று இருக்கிறீர்கள் உங்களை உய்விக்கவே மழை பெய்கிறது நீங்கள் நம்பிக்கையற்று இருக்கிறீர்கள் உங்களை ஆற்றுப்படுத்தவே மழை பெய்கிறது நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் உங்களைக் கொஞ்சவே மழை பெய்கிறது நீங்கள் நினைக்க ஆளில்லாமல் இருக்கிறீர்கள் உங்களை நனைத்துப் பார்க்கவே மழை பெய்கிறது நீங்கள் சிரிக்க மறந்தவராக இருக்கிறீர்கள் உங்களைச் சிரிக்க வைக்கவே மழை பெய்கிறது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கவே மழை பெய்கிறது கார்த்திக் பிரகாசம்...

இழப்பு

எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்க முடியவில்லை அவ்வப்போது எறிந்துவிடுகிறேன் சிலவற்றைத் தூக்கி எறிகையில் என்னில் கொஞ்சம்  இழக்கப்படுவதை மட்டும் என்னால் ஒருபோதும் தடுக்க முடியவில்லை கார்த்திக் பிரகாசம்...

தாய்மையின் கருணை

கடனுக்குக் காய்கறி அரிந்து வெறுமனே எண்ணெய்யில் பொரித்துப் படைக்கப்படும் உணவு பண்டங்கள் அல்ல அவளின் நோக்கம் உயர்ந்தது பசி தீர்ந்தால் மட்டும் போதாது வாழ்வில் பசியோடு கழித்த நாட்களுக்கும் சேர்த்து வயிறார உண்ண வேண்டும் பட்டினியால் ஒடுங்கிப் போயிருக்கும் உதரம் உயிர்த்தெழ வேண்டும் உணவின் சுவையை உப்பு காரம் புளி மட்டும் தீர்மானிப்பதில்லை அள்ளி வைக்கும் கைகளும் அந்த கைகளில் உரிமையான அதட்டல் இருக்கும் உண்மையான அன்பு இருக்கும் தாய்மையின் கருணை இயல்பாகவே நிரம்பி இருக்கும் கார்த்திக் பிரகாசம்...

நான் எப்போது...?

நான் எப்போது 'உன்னைக் காதலிக்கிறேன்'  என்று சொன்னேன்.? 'எதற்காகவும் கவலைப்படாதே நீ தனியாக இல்லை நான் உன்னோடு இருக்கிறேன்' என்று சொன்னாயே அது போதாதா.? கார்த்திக் பிரகாசம்...

வார்த்தைகள் தான் எல்லாம்

எச்சிலாய் வார்த்தைகளைத் துப்பி விடுகிறார்கள் எளிதில் உலர்வதில்லை வார்த்தைகள் எச்சில் போல் ஆயிரம் கத்தி குத்தல்களின் பலம் கொண்டவை உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் கூர்மையை ஒத்தவை 'ஒரு வார்த்தையில் என்ன குடியா முழுகிவிட்டது' என்று மீனைப் போல நழுவிட முடியாது உடல் முழுதும் காதுகள் கொண்ட மனிதனுக்கு வார்த்தைகள் தான் எல்லாம் வார்த்தைகள் தான் வாழ்க்கை கார்த்திக் பிரகாசம்...