Skip to main content

Posts

Showing posts from September, 2021

சிறகு

பல பறவைகளின்  உதிர்ந்த இறகுகளைப் பொறுக்கி ஓர் சிறகுச் செய்தேன் உதிர்த்துச் சென்ற எல்லா பறவைகளின் சிறகைப் போலவும் இருந்தது அது கார்த்திக் பிரகாசம்...

சாத்தான்

ஒரு காலத்தில் நான் மனிதனாக இருந்தேன் சமூகத்தின் கீதையில் ~ பைபிளில் ~ குரானில் வரையறுக்கப்பட்ட நன்னடத்தைகள் அனைத்தும் என்னிலடக்கம் - தன் நெருங்கிய கூட்டாளிகளை வாழ்வானது அறிமுகப்படுத்திடும் வரை அநீதி ~ காயம் ~ சூழ்ச்சி ~ துரோகம் ~ துயரம் ~ வலி ~ பிரிவு ~ வீழ்ச்சி மனிதத்தின் மலிவான கீறல்களில் இறக்கும் முன்னே இரையாக சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன் சாத்தனாக கார்த்திக் பிரகாசம்...

எப்போதோ நான் இறந்துவிட்டேன்

என்றோ  தொலைந்து போன என்னைத் தேடிடும் போது எப்போதோ தொலைத்த அவளைக் கண்டடைந்தேன் வடுக்கள் மறைத்து இதயத்தின் முற்பகுதியில் புன்னகைத்தாள் மறுபகுதி கன்னத்தில் வழிந்தது கரங்களைப் பிடித்து நான் இன்னும் இறக்கவில்லை என்றேன் எப்போதோ நான் இறந்துவிட்டனே உனக்கு நினைவில்லையா என்றாள் அப்படியென்றால் ‌ என்னை மறந்துவிட்டாயா அதுதான் சொன்னேனே எப்போதோ நான் இறந்துவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

கைவிடப்பட்டவனின் கடைசிக் குரல்

பணங்காசு முக்கியமா போச்சு சொமந்த கட்டயே சொமையா ஆச்சு சொந்தபந்தம் பாரமாச்சு நெஜமெல்லாம் நீர்த்து போச்சு போற வழிக்கு நெனப்பு ஒன்னே சொந்தமாச்சு ஒறக்கம் இல்லமா ஒழைச்சேன் ஒதுங்க ஒரு எடம் இல்ல யப்போ ஆச ஆசயா வளத்தேன் அப்போ அரவயித்து சோத்துக்கு நாதியில்ல இப்போ தூணா இருந்தவ போனதும் தொரத்திபுட்டான் மகனவனும் கார் நிறுத்த எடம் இருக்கு வீட்டுல அத்தனுக்கு கட்டில் போட எடமில்ல மனசுல காடு போற வயசாயிடுச்சு பாத்துக்க கடேசி வர காப்பாத்துவான்னு கண்ட கனவெல்லாம் பாழாயிடுச்சு கேட்டுக்க பீ மூத்திரம் கழுவக் கூட கை எழல கண்ணீரா வருது மக்கா கண்ண மூடி படுத்துக்கறன் இதுவே கடேசி ராவாக்கிடு கூற்றுவா கார்த்திக் பிரகாசம்...

மானசரோவர்

எல்லா வியாதிகளுக்கும்  ஒரே மருந்து இருந்தால் நன்றாக இருக்குமே என பிரலாபிக்கிறான் நண்பன் எனக்கு அதெல்லாம் தெரியாது ஆனால் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேண்டுமானால் ஒரே தீர்வு சாத்தியம் மறந்து விடுவது இல்லையேல் மன்னித்து விடுவது கார்த்திக் பிரகாசம்...

வலை

பிரம்மாண்ட வலைக்குள் சிக்கிய நெத்திலி மீனாய் கையளிக்கப்பட்டிருக்கிறேன் வாழ்க்கைக்கு பிளந்த வலிகள் பகிர்தலின் கடைசிச் சொட்டில் மென்மையாய் வருடினாலும் யாசகமாய் கொட்டும் ஆறுதல்கள் காயத்தின் கொள்ளளவுக்குப் பூரணமாய் இல்லை வலியே வலையானால் வாழ்க்கையுமதுவே சிறுசிறு வலிகளால் கோர்க்கப்பட்ட பிரம்மாண்ட வலை கார்த்திக் பிரகாசம்...